Sunday, May 25, 2014

பாமாலை 264 - நல் மீட்பர் இயேசு (St. Peter)

பாமாலை 264 – நல் மீட்பர் இயேசு நாமமே
(How sweet the name of Jesus sounds)


’எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்’ பிலி 2:11

‘கர்த்தருடைய தூதன் … அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்’ (மத் 1:20,21). ‘இயேசு’ என்னும் பதத்திற்கு ‘இரட்சகர்’ என்பது பொருள்.  நாம் இயேசுவின் இனிய நாமத்தைக் குறித்த அநேக பாடல்களைப் பாடுகின்றோம். ‘தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்’, ‘இயேசுவின் நாமமே திருநாமம்’, ‘இயேசுவின் இன்ப நாமத்தை எல்லோரும் போற்றுங்கள்’, முதலிய பாடல்கள் இதற்கு உதாரணங்களாகும்.  இரட்சகர் முதலில் பூலோகத்தில் தோன்றியவுடன், தேவதூதன் ’அவருடைய நாமம், இயேசு என்னப்படும். ஏனெனில் அவர் தமது ஜனங்களைத் தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிப்பார்’ என்று அறிவித்தான்.  இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே அவரது இனிய நாமத்தை ருசிக்க முடியும். 

இப்பாடலை எழுதியவர், வாழ்க்கையில் பலவிதமான நிலைமைகளை அனுபவித்து, இறுதியில் இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் நாமத்தின் இனிமையை ருசித்த ஒரு பக்தன்.

John Newton
இதை எழுதிய ஜான் நியூட்டன் போதகர் (John Newton) 1725ம் ஆண்டு, ஜூலை மாதம், 24ம் தேதி, லண்டன் மாநகரில் பிறந்தார்.  இவரது தாயார் கடவுள் பக்தி மிகுந்தவர்.  மகனை ஜெபத்தோடு பக்தி நெறியில் வளர்த்தார்.  ஆனால் அவர் ஏழு வயதாயிருக்கையில் தாயார் இறந்து போனார்கள்.  ஆயினும் தன் வாழ்க்கை முழுவதும் தன் தாயாரின் ஜெப வாழ்க்கையை அவர் மறந்து போகவில்லை.  அவரது தந்தை கப்பற்படையில் பணியாற்றி வந்ததால் பதினோரு வயதிலேயே மகனும் கப்பலில் கடைநிலை ஊழியனாக வேலையிலமர்த்தப்பட்டார்.  பின்பு, நடுநிலைக் கப்பலோட்டிப் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.  ஆனால், கீழ்ப்படியாமைக்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டு, அடிமை வியாபாரம் செய்த ஒருவரது கப்பலில் வேலையிலமர்ந்து, பின்னர் அடிமை வியாபாரமும் செய்து வந்தார்.  கப்பலில் பிரயாணம் செய்யும்போது, தற்செயலாக ‘Imitation of Christ’ என்ற பக்தி நூல் கிடைக்கவே, அதைப் படித்துக் கடவுளைப் பற்றி சிந்திக்கலானார்.  1748ல் ஓரிரவு அவர் வேலை செய்த கப்பல் பெரும்புயலில் அகப்பட்டு, முழுகும் தருவாயிலிருந்தது.  ஜான் நியூட்டன் முழங்காலில் நின்று மிகுந்த ஊக்கத்துடன், ’ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும்’ என்று ஜெபித்தார்.  சேதமின்றி கப்பல் கரை சேர்ந்தது.  அப்போதுதான் கடவுளின் வல்லமையையும் அன்பையும் உணர்ந்து, இளவயதில் அவரது தாயார் அவரை பக்தி நெறியில் வளர்த்ததையும், தமக்காக அவர்கள் முழங்காலில் நின்று ஜெபித்ததையும் சிந்திக்கலானார்.  தம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு ஆண்டவரின் மன்னிப்பைப் பெற்று, அதுமுதல் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்.

அடிமை வியாபாரம் கிறிஸ்தவக் கொள்கைக்கு மாறானது என அவர் உணர்ந்து, கப்பல் வேலையை விட்டு, லிவர்பூல் நகரில் தமது மனைவியுடன் இல்லற வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்.  பின்பு, கிரேக்க, லத்தீன், எபிரேய மொழிகளைக் கற்று, வேத சாஸ்திரமும் படித்து, 1764ம் ஆண்டு ஆயர் பட்டமும் பெற்று, தமது முப்பத்தொன்பதாம் வயதில் ஓல்னி என்னுமிடத்தில் ஒரு சபையில் குருவாகப் பணியாற்றலானார்.  இங்கு பணியாற்றும்போது, பிரபல எழுத்தாளரான வில்லியம் கூப்பர் (William Cowper) என்பவரோடு நட்பு கொண்டு, இருவரும் சேர்ந்து பாடல்கள் எழுத ஆரம்பித்தனர்.  அவர்கள் எழுதிய பாடல்களை, ‘ஓல்னி பாடல்கள்’ (Olney Hymns) என்னும் பெயருடன் புத்தக வடிவில் வெளியிட்டனர்.  இதிலுள்ள பாடல்களில் நியூட்டன் போதகர் இருநூற்று எண்பத்து மூன்று பாடல்கள் எழுதியுள்ளார். ‘நல் மீட்பர் இயேசு நாமமே’ என்னும் பாடல் இப்புத்தகத்துக்காக 1779ல் எழுதப்பட்டது.  இப்பாடலில் அவர் ஆண்டவரின் அன்பை உணர்ந்து, அவர் நாமத்தின் மகத்துவத்தை வர்ணிக்கிறார்.

அவர் ஒரு சிறந்த பக்திமானாயிருந்தபோதிலும், சில சமயங்களில் குறுகிய மனப்பான்மையுள்ளவராகக் காணப்பட்டார்.  உலகப் பிரசித்திபெற்ற ‘Handel’s Messiah’ என்னும் சங்கீதக் கோர்வையை (Oratorio) எதிர்த்து, அநேக பிரசங்கங்கள் லண்டன் மாநகரில் செய்தார்.  ஏனெனில், இச்சங்கீதம் ஒரு கலா நிகழ்ச்சி (entertainment) என்றும், இதற்கு வேதவசனங்களை அடிப்படையாகக் கொண்டது தவறு என்றும் அவர் அபிப்பிராயப்பட்டார்.  அவர் எழுதிய இதர பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.

நியூட்டன் போதகர் 1807ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 21ம் தேதி, தமது 82ம் வயதில் காலமானார்.  மரணத்துக்குச் சற்று நேரத்துக்கு முன் அவரைப் பார்க்கச் சென்ற நண்பர் ஒருவரிடம் அவர் கூறியது, ‘என் ஞாபக சக்தியை அநேகமாக இழந்துவிட்டேன்; ஆனால் இரண்டு காரியங்கள் மட்டும் எனக்கு ஞாபகமிருக்கின்றன; ஒன்று, நான் பாவி, இரண்டாவது, கிறிஸ்து என் இரட்சகர்’.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்.

2.    அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே;
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே.

3.    பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்!
இளைத்துப் போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்.

4.    என் ரட்சகா, என் கேடகம்,
என் கோட்டையும் நீரே!
நிறைந்த அருள் பொக்கிஷம்,
அனைத்தும் நீர்தாமே.

5.    மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும்,
என் ஜீவனும் நீரே;
என் தீர்க்கரும், என் ராஜாவும்
ஆசாரியருமே.

6.    என் நெஞ்சின் ஊக்கம் அற்பந்தான்,
என் அன்பில் குளிர்ந்தேன்!
உன் முகம் பார்க்கும்போதோ, நான்
சீராகப் போற்றுவேன்.

7.    இம்மையில் ஆயுள் முழுதும்
உம் அன்பைக் கூறுவேன்;
உம் நாமத்தால் என் சாவிலும்
நான் ஆறித் தேறுவேன்.
How sweet the Name of Jesus sounds

Post Comment

No comments:

Post a Comment