Sunday, March 26, 2017

பாமாலை 75 - உம் அவதாரம் பாரினில்

பாமாலை 75 – உம் அவதாரம் பாரினில்


William H. Monk
பரி. யோவான் சுவிசேஷகன் திருநாளுக்குப் பாடப்படும் இப்பாடலின் இசையை எழுதியவர் வில்லியம் மாங்க் என்பவர் (William H. Monk). இவர் 1823ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் பிறந்தார். லண்டன் கிங் கல்லூரியில் இசை ஆசிரியராக இருந்த இவர் பரி. மத்தியாஸ் ஆலயத்தில் (St. Matthias, Stoke Newington, London) சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு இசை நடத்துனராக தன் ஊழியத்தைச் செய்தார்.  உலகம் முழுதும் ஏறக்குறைய 60 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்ந்த Hymns Ancient and Modern என்ற பாடல் புத்தகத்தின் முதல் பிரதியைத் தொகுத்தவர் இவரே.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    உம் அவதாரம் பாரினில்
கண்ணுற்ற பக்தனாம் யோவான்;
கர்த்தா, உம் சாந்த மார்பினில்
அன்பாகச் சாயவும் பெற்றான்.

2.    சாவுறும் தன்மை தேவரீர்
தரித்தும், திவ்விய வாசகன்,
அநாதி ஜோதி ரூபம் நீர்,
என்றே தெரிந்துகொண்டனன்.

3.    கழுகைப் போல் வான் பறந்தே
மா ரகசியம் கண்ணோக்கினான்;
நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
மெய்யான சாட்சி கூறினான்.

4.    உம் அன்பு அவன் உள்ளத்தில்
பெருகி பொங்கி வடிந்து,
அவன் நல் ஆகமங்களில்
இன்னும் பிரகாசிக்கின்றது.

5.    சீர் கன்னி மைந்தா, இயேசுவே,
பூலோக ஜோதியான நீர்,
பிதா, நல்லாவியோடுமே
என்றென்றும் துதி பெறுவீர்.

Post Comment

Tuesday, March 21, 2017

பாமாலை 110 - மரித்தாரே என் ஆண்டவர்

பாமாலை 110 – மரித்தாரே என் ஆண்டவர்


William Horsley
இப்பாடலை எழுதியவர் யார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.  இப்பாடலுக்கான Horsley என்னும் ராகத்தை வில்லியம் ஹார்ஸ்லே (William Horsley) என்பவர் எழுதியுள்ளார். இவர் வாழ்ந்த காலம் 1774-1858 ஆகும். தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட  60 ஆண்டுகள் இவர் Ely Chapel, Holborn, London’ல்  Organist'ஆகப் பணிபுரிந்துள்ளார்.  இவர் இயற்றிய மற்ற ராகங்கள், பாடல்கள் குறித்த தகவல்கள் இல்லை. ஆங்கிலத்தில் இதே ராகத்தில் There is a green hill far away என்ற பாடல் பாடப்படுகிறது.  


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மரித்தாரே என் ஆண்டவர்
சிலுவையில்தானே
மரித்தாரே என் ரட்சகர்
ஆ எனக்காகவே

2.    சிலுவைமீது ஜீவனை
என் மீட்பர் விட்டாரே
எனக்குத்தான் இப்பலியை
செலுத்தி மாண்டாரே

3.    நான் எண்ணி எண்ணி வருகில்
என் நேசம் ஊக்கமாய்
கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்
எரியும் பக்தியாய்

4.    என் மீட்பர் இயேசு கிறிஸ்துதாம்
இவ்வருள் செய்தாரே
நான் என்ன பதில் செய்யலாம்?
ஈடொன்றுமில்லையே

5.    என் தேகம், செல்வம், சுகமும்
என் ஜீவன் யாவுமே
சுகந்த பலியாகவும்
படைப்பேன் இயேசுவே

Post Comment

Wednesday, March 15, 2017

பாமாலை 70 - மா மகிழ்வாம் இந்நாளில்

பாமாலை 70 – மா மகிழ்வாம் இந்நாளில்
(When Christmas morn is dawning)

கிறிஸ்மஸ் காலங்களில் மிக அரிதாகப் பாடப்படும் இப்பாடலானது முதலில் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜெர்மன் மொழியில் “Wir hatten gebauet ein” என்ற மாணவர்கள் பாடும் பாடலுக்கான ராகத்தில், ஏபல் பர்க்ஹார்ட் (Abel Burckhardt) என்பவர் கிறிஸ்துமஸ் காலத்துக்கேற்ற வரிகளை ஜெர்மானிய மொழியில் எழுதினார்.  இப்பாடலை ஆங்கிலத்தில் க்ளவுட் வில்லியம் ஃபாஸ் (Claude William Foss) என்பவர் மொழிபெயர்த்தார்.  க்ளவுட் 1855ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ஜெனிவா நகரத்தில் (Geneva, Illinois) பிறந்தார். ரெட்விங் மற்றும் அகஸ்டானா கல்லூரிகளில் (Red Wing College institute at Red Wing, Minnesota, then entered Augustana College at Rock Island) தமது கல்லூரிப்படிப்பை முடித்த இவர், 1884ம் ஆண்டு அகஸ்டானா கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

Claude William Foss(
கல்லூரியில் பணிபுரிந்துகொண்டே அவர், அகஸ்டானா பேராயத்தால் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கழகத்தின் (Augustana Book Concern) இயக்குநர்களில் ஒருவராக பதவி வகித்தார்.  இக்கழகத்தின் சார்பாக 1908ம் ஆண்டு ஃபாஸ் இந்தியாவுக்கு ஊழிய காரியங்களை மேற்பார்வையிடும்படி அனுப்பப்பட்டார்.  இங்கே தனது பணியை நிறைவு செய்து, எகிப்து, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் பயணித்தார்.  அகஸ்டானா லுத்ரன் திருச்சபைக்கென அநேக ஜெர்மன் பாடல்களை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  அப்படி மொழிபெயர்க்கப்பட்டப் பாடல்களில் ஒன்றுதான் ‘மா மகிழ்வாம் இந்நாளில்’ எனும் இப்பாடலாகும்.  ஃபாஸ் 1935ம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மா மகிழ்வாம் இந்நாளில்
செல்வோம் முன்னணைக்கே;
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.

2.    வந்தீர் மா அன்பாய்ப் பூவில்
விண் லோகம் துறந்தீர்;
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.

3.    மெய் அன்பர் நண்பர் நீரே,
நீரே எம் வாஞ்சையும்;
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்.  
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்.

Post Comment

Thursday, March 9, 2017

பாமாலை 307 - நல் மீட்பரே உம்மேலே

பாமாலை 307 – நல் மீட்பரே, உம்மேலே
(I lay my sins on Jesus)

’இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’. யோவான் 1:29

இப்பாடலை எழுதிய ஹோரேஷியஸ் போனர் (Horatius Bonar) 1808ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 19ம் தேதி ஸ்காட்லண்ட் நாட்டில் எடின்பரோ நகரில் (Edinburgh, Scotland) பிறந்தார்.  அவரது முன்னோர்களில் பலர் போதகர்களாகப் பணியாற்றியவர்கள். அவரது தாயார் சிறந்த தெய்வபக்தியும் தூய்மையான வாழ்க்கையும் உள்ளவராதலால், அவர்களது மூன்று பிள்ளைகளான ஜான், ஹோரேஷியஸ், ஆன்ட்ரூ என்பவர்கள் கிறிஸ்தவ சன்மார்க்க நெறியில் வளர்க்கப்பட்டு, பிற்காலத்தில் போதகர்களாகப் பணியாற்றினர்.  ஹோரேஷியஸ், எடின்பரோ நகரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் தாமஸ் சால்மர்ஸ் என்னும் புகழ்பெற்ற தலைமை ஆசிரியரின் கீழ் கல்வி பயின்றார். இவ்வாசிரியரின் மிகச்சிறந்த போதனை, ஹோரேஷியஸின் ஆத்தும வளர்ச்சிக்கு மிகவும் தூண்டுதலாயிருந்தது.  பின்னர், அவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, கல்லூரிப்படிப்பை முடித்து, லீத் நகரத்தில் தூய யோவான் ஆலயத்தில் தம் திருப்பணியை ஆரம்பித்தார்.  ஓய்வுநாட்பள்ளி ஊழியத்தில் விசேஷக் கவனம் செலுத்தி, சிறுவர்களுக்கேற்ற பாடல்கள் எழுதி, அவற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 1837ல் தமது முப்பதாவது வயதில் குரு அபிஷேகம் பெற்று, கெல்ஸோ (Kelso) என்னுமிடத்தில் சபைக் குருவாகப் பணியாற்றினார். சுமார் முப்பது ஆண்டுகள் கெல்ஸோவில் பணியாற்றியபின், எடின்பரோ நகருக்கு மாற்றப்பட்டு, ஸ்காட்லாண்டிலுள்ள சுய ஆளுகைச் சபைகளின் (Free Church of Scotland) ஐக்கியத்திற்காக வெகுவாக உழைத்தார்.  இச்சேவைக்காக 1883ல் அவர் அச்சபையின் பிரதம குரு (Moderator) என்னும் உயர் பதவியைப் பெற்றார். அவரது வாழ்க்கையில் அவருக்குப் பல துன்பங்கள் நேர்ந்தன. அவரது பிள்ளைகளில் ஐந்துபேர் இளவயதிலேயே இறந்தனர்.  அவர் மரிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னமே அவரது மனைவியும் மறுமைக்குள் சென்றார்.

”நல் மீட்பரே, உம்மேலே” என்னும் இப்பாடல், நியாயத்தீர்ப்புநாளின்போது மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு முறை நாம் பாவச்சேற்றில் சிக்கிக்கொள்ளும்போதும், ஆண்டவரிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டுச் சேர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.  அறுநூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதிய போனர், முதன்முதலில் எழுதியது ”நல் மீட்பரே, உம்மேலே” என்னும் இப்பாடல்தான் என்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.  இந்தப் பாமாலைக்கு, ‘சபையின் அஸ்திபாரம்’ பாடலுக்கு வழங்கப்பட்ட Aurelia என்னும் ராகமும் பொருத்தமானது.  அநேக திருச்சபைகளில் Aurelia ராகத்திலும் இது பாடப்படுகிறது.

இப்பாடலைத் தவிர அவர், ஏராளமான பாடல்களும், ஆங்கிலச் செய்யுள்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய இதர பாடல்களில் புகழ்பெற்றவை:

‘வா, பாவி, இளைப்பாற வா’ - பாமாலை 284
‘மயங்கும் தாசனை தேவா, நீர் நடத்தும்’ – பாமாலை 325
’நிரப்பும் என்னைத் துதியால்’ – பாமாலை 374

அவர் 1889ம் ஆண்டு, ஜூலை மாதம் 31ம் தேதி தமது 81வது வயதில் எடின்பரோ நகரில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    நல் மீட்பரே, உம்மேலே
என் பாவம் வைக்கிறேன்;
அன்புள்ள கையினாலே
என் பாரம் நீக்குமேன்;
நல் மீட்பரே, உம்மேலே
என் குற்றம் வைக்க, நீர்
உம் தூய ரத்தத்தாலே
விமோசனம் செய்வீர்

2.    நல் மீட்பரே, உம்மேலே
என் துக்கம் வைக்கிறேன்
இப்போதிம்மானுவேலே
எப்பாடும் நீக்குமேன்
நல் மீட்பரே, உம்மேலே
என் தீனம் வைக்க நீர்
உம் ஞானம் செல்வத்தாலே
பூரணமாக்குவீர்

3.    நல் மீட்பரே, உம்பேரில்
என் ஆத்மா சார, நீர்
சேர்த்து உம் திவ்விய மார்பில்
சோர்பெல்லாம் நீக்குவீர்;
நேசா! இம்மானுவேலே!
இயேசென்னும் நாமமும்
உகந்த தைலம்போலே
சுகந்தம் வீசிடும்

4.    நல் மீட்பரே, பாங்காக
அன்போடு சாந்தமும்
நீர் தந்தும் சாயலாக
சீராக்கி மாற்றிடும்;
நல் மீட்பரே, உம்மோடு
பின் விண்ணில் வாழுவேன்;
நீடூழி தூதர் பாட,
பாடின்றிப் பூரிப்பேன்

Post Comment

Saturday, March 4, 2017

என் ஜெபவேளை (Sweet Hour of Prayer)

Songs & Solos 318 – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்
(Sweet Hour of Prayer)

’நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும், தேவ வசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்’. அப் 6:4

நாம் எப்போதாவது அறுபது நிமிடங்கள் கொண்ட ஒருமணி நேரம் ஜெபத்தில் தரித்திருக்கிறோமா?  நம்மில் அநேகர் பத்து நிமிடங்கள்கூட தனி ஜெபத்தில் தரித்திருப்பதில்லை என்பதை மறுக்கமுடியாது.  ஆலய ஆராதனைகளில் போதகர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, ‘இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்’ என்னும் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லையா?  ஒருமணி நேர ஜெபம் என்பது நமக்கு அதிகமாகத் தோன்றும்.  ஆயினும், இப்பாடலை எழுதியவர், ஜெபவேளையை ஏன் இனிமையான நேரம் எனக் கூறுகிறார்? ஜெபம் நம்மை நாமே முகமுகமாய் பார்க்கச் செய்கிறது.  கடவுளோடு பேச ஆரம்பிக்கும்போது, அவர் முன்னிலையில் நிற்பதற்கு நாம் தகுதியற்றவர்களென்பதை உணருகிறோம்.  நமது ஜெபத்தில் நமக்குத் தேவையானவற்றை மட்டுமல்ல, நமது விருப்பங்களையும் கடவுள் முன் வைக்கிறோம்.  தகப்பனிடத்தில் பிள்ளை குறை கூறி முறுமுறுப்பதைப்போல, பரம பிதாவிடத்திலும் நடந்து கொள்ளுகிறோம்.  ஆயினும், இவற்றையெல்லாம் நமது பரமபிதா பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  ஆகவே, ஜெபவேளை ஓர் இனிமையான வேளையாகவே இருக்கிறது.

William Bradbury
1842ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், கோல்ஸ்ஹில் என்னுமிடத்தில், வில்லியம் வால்ஃபோர்ட் (William Walford) என்னும் கண்பார்வையற்ற போதகர், தமது அறையில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தார்.  கண் பார்வை இல்லாததால் அவர் அதிக நேரம் ஜெபத்தில் தரித்திருப்பது வழக்கம்.  அன்று அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது, அவரது நண்பரான தாமஸ் சால்மன் போதகர் அவரிடம் வந்தார்.  வந்தவர் யாரென்று தெரிந்தவுடன், வால்ஃபோர்ட் அவரிடம், ‘என் மனதில் ஜெபத்தைக் குறித்த ஒரு பாடல் உருவாகிக்கொண்டிருக்கிறது. நான் சொல்லச் சொல்ல அதை எழுதிக்கொள்ளுங்கள்’ எனக்கூறி, வரிவரியாக அதைச் சொல்லவே, சால்மன் போதகர் அதை எழுதிக்கொண்டார்.  எழுதி முடித்தவுடன் அதைப் படித்துக்காட்டி, வால்ஃபோர்ட் அதைச் சரியன ஒத்துக்கொண்டார்.  சால்மன் போதகரும் இப்பாடலின் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டார்.  இரு ஆண்டுகளுக்குப்பின், சால்மன் போதகர் அமெரிக்காவில் நியூயார்க் நகருக்குச் சென்றார்.  அங்கு 1848 ஆண்டு செப்டம்பர் மாதம், முதலாவதாக இப்பாடல் ஒரு கிறிஸ்தவப் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது.  இப்பாடலைப் பார்த்தவரெல்லாம் அதைப் பாராட்டினர்.  சரீரக்கண்கள் பார்வையற்றிருந்தாலும், தனது ஆத்துமக் கண்களின் மூலம் ஜெபத்தின் வல்லமையை உணர்ந்ததால், வால்ஃபோர்ட் இப்பாடலை எழுதமுடிந்தது.  வில்லியம் பிராட்பரி (William Bradbury) என்னும் சங்கீத நிபுணர் இப்பாடலுக்கு ஓர் அழகிய ராகத்தை அமைத்தார்.  இதுவே நாம் இப்போது இப்பாடலுக்கு உபயோகிக்கும் ராகமாகும்.

இப்பாடலை எழுதிய வில்லியம் வால்ஃபோர்ட், 1800ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்.  இளவயதில் மிகவும் ஏழையாயிருந்தார்.  சிறுவனாயிருக்கும்போது விளையாட்டு சாதனங்களைச் செய்து விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.  அடிக்கடி பண நெருக்கடிகளும், மற்றும் பல கவலையான நிலைமைகளும் அவரைத் துன்புறுத்தின.  அச்சமயங்களில் அவர் ஆண்டவரின் பாதத்தில் வெகுநேரம் ஜெபத்தில் தரித்திருந்து, தன் கவலைகள் நீங்கப்பெற்றார்.  இவ்விதமான அதிகமான ஆன்மீக அனுபவம் அவருக்குக் கிடைத்தது.  கண்பார்வையற்றிருந்தாலும், அடிக்கடி ஆலய ஆராதனைகளில் அருளுரை ஆற்ற அவர் அழைக்கப்பட்டார்.  பல ஆண்டுகளுக்குப்பின், அவர் போதகராக அபிஷேகம் பெற்று, சில சபைகளில் திருப்பணியாற்றினார்.

அவர் 1876ம் ஆண்டு, தமது எழுபத்தைந்தாவது வயதில் மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
அப்போதென் துக்கம் மறப்பேன்!
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசையாவும் சொல்லுவேன்!
என் நோவுவேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
ஆனந்த களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்
வாடாத க்ரீடம் சூடுவேன்!

Sweet Hour of Prayer

Post Comment