Saturday, March 4, 2017

என் ஜெபவேளை (Sweet Hour of Prayer)

Songs & Solos 318 – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்
(Sweet Hour of Prayer)

’நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும், தேவ வசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்’. அப் 6:4

நாம் எப்போதாவது அறுபது நிமிடங்கள் கொண்ட ஒருமணி நேரம் ஜெபத்தில் தரித்திருக்கிறோமா?  நம்மில் அநேகர் பத்து நிமிடங்கள்கூட தனி ஜெபத்தில் தரித்திருப்பதில்லை என்பதை மறுக்கமுடியாது.  ஆலய ஆராதனைகளில் போதகர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, ‘இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்’ என்னும் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லையா?  ஒருமணி நேர ஜெபம் என்பது நமக்கு அதிகமாகத் தோன்றும்.  ஆயினும், இப்பாடலை எழுதியவர், ஜெபவேளையை ஏன் இனிமையான நேரம் எனக் கூறுகிறார்? ஜெபம் நம்மை நாமே முகமுகமாய் பார்க்கச் செய்கிறது.  கடவுளோடு பேச ஆரம்பிக்கும்போது, அவர் முன்னிலையில் நிற்பதற்கு நாம் தகுதியற்றவர்களென்பதை உணருகிறோம்.  நமது ஜெபத்தில் நமக்குத் தேவையானவற்றை மட்டுமல்ல, நமது விருப்பங்களையும் கடவுள் முன் வைக்கிறோம்.  தகப்பனிடத்தில் பிள்ளை குறை கூறி முறுமுறுப்பதைப்போல, பரம பிதாவிடத்திலும் நடந்து கொள்ளுகிறோம்.  ஆயினும், இவற்றையெல்லாம் நமது பரமபிதா பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  ஆகவே, ஜெபவேளை ஓர் இனிமையான வேளையாகவே இருக்கிறது.

William Bradbury
1842ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், கோல்ஸ்ஹில் என்னுமிடத்தில், வில்லியம் வால்ஃபோர்ட் (William Walford) என்னும் கண்பார்வையற்ற போதகர், தமது அறையில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தார்.  கண் பார்வை இல்லாததால் அவர் அதிக நேரம் ஜெபத்தில் தரித்திருப்பது வழக்கம்.  அன்று அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது, அவரது நண்பரான தாமஸ் சால்மன் போதகர் அவரிடம் வந்தார்.  வந்தவர் யாரென்று தெரிந்தவுடன், வால்ஃபோர்ட் அவரிடம், ‘என் மனதில் ஜெபத்தைக் குறித்த ஒரு பாடல் உருவாகிக்கொண்டிருக்கிறது. நான் சொல்லச் சொல்ல அதை எழுதிக்கொள்ளுங்கள்’ எனக்கூறி, வரிவரியாக அதைச் சொல்லவே, சால்மன் போதகர் அதை எழுதிக்கொண்டார்.  எழுதி முடித்தவுடன் அதைப் படித்துக்காட்டி, வால்ஃபோர்ட் அதைச் சரியன ஒத்துக்கொண்டார்.  சால்மன் போதகரும் இப்பாடலின் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டார்.  இரு ஆண்டுகளுக்குப்பின், சால்மன் போதகர் அமெரிக்காவில் நியூயார்க் நகருக்குச் சென்றார்.  அங்கு 1848 ஆண்டு செப்டம்பர் மாதம், முதலாவதாக இப்பாடல் ஒரு கிறிஸ்தவப் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது.  இப்பாடலைப் பார்த்தவரெல்லாம் அதைப் பாராட்டினர்.  சரீரக்கண்கள் பார்வையற்றிருந்தாலும், தனது ஆத்துமக் கண்களின் மூலம் ஜெபத்தின் வல்லமையை உணர்ந்ததால், வால்ஃபோர்ட் இப்பாடலை எழுதமுடிந்தது.  வில்லியம் பிராட்பரி (William Bradbury) என்னும் சங்கீத நிபுணர் இப்பாடலுக்கு ஓர் அழகிய ராகத்தை அமைத்தார்.  இதுவே நாம் இப்போது இப்பாடலுக்கு உபயோகிக்கும் ராகமாகும்.

இப்பாடலை எழுதிய வில்லியம் வால்ஃபோர்ட், 1800ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்.  இளவயதில் மிகவும் ஏழையாயிருந்தார்.  சிறுவனாயிருக்கும்போது விளையாட்டு சாதனங்களைச் செய்து விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.  அடிக்கடி பண நெருக்கடிகளும், மற்றும் பல கவலையான நிலைமைகளும் அவரைத் துன்புறுத்தின.  அச்சமயங்களில் அவர் ஆண்டவரின் பாதத்தில் வெகுநேரம் ஜெபத்தில் தரித்திருந்து, தன் கவலைகள் நீங்கப்பெற்றார்.  இவ்விதமான அதிகமான ஆன்மீக அனுபவம் அவருக்குக் கிடைத்தது.  கண்பார்வையற்றிருந்தாலும், அடிக்கடி ஆலய ஆராதனைகளில் அருளுரை ஆற்ற அவர் அழைக்கப்பட்டார்.  பல ஆண்டுகளுக்குப்பின், அவர் போதகராக அபிஷேகம் பெற்று, சில சபைகளில் திருப்பணியாற்றினார்.

அவர் 1876ம் ஆண்டு, தமது எழுபத்தைந்தாவது வயதில் மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
அப்போதென் துக்கம் மறப்பேன்!
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசையாவும் சொல்லுவேன்!
என் நோவுவேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
ஆனந்த களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்
வாடாத க்ரீடம் சூடுவேன்!

Sweet Hour of Prayer

Post Comment

No comments:

Post a Comment