Thursday, March 9, 2017

பாமாலை 307 - நல் மீட்பரே உம்மேலே

பாமாலை 307 – நல் மீட்பரே, உம்மேலே
(I lay my sins on Jesus)

’இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’. யோவான் 1:29

இப்பாடலை எழுதிய ஹோரேஷியஸ் போனர் (Horatius Bonar) 1808ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 19ம் தேதி ஸ்காட்லண்ட் நாட்டில் எடின்பரோ நகரில் (Edinburgh, Scotland) பிறந்தார்.  அவரது முன்னோர்களில் பலர் போதகர்களாகப் பணியாற்றியவர்கள். அவரது தாயார் சிறந்த தெய்வபக்தியும் தூய்மையான வாழ்க்கையும் உள்ளவராதலால், அவர்களது மூன்று பிள்ளைகளான ஜான், ஹோரேஷியஸ், ஆன்ட்ரூ என்பவர்கள் கிறிஸ்தவ சன்மார்க்க நெறியில் வளர்க்கப்பட்டு, பிற்காலத்தில் போதகர்களாகப் பணியாற்றினர்.  ஹோரேஷியஸ், எடின்பரோ நகரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் தாமஸ் சால்மர்ஸ் என்னும் புகழ்பெற்ற தலைமை ஆசிரியரின் கீழ் கல்வி பயின்றார். இவ்வாசிரியரின் மிகச்சிறந்த போதனை, ஹோரேஷியஸின் ஆத்தும வளர்ச்சிக்கு மிகவும் தூண்டுதலாயிருந்தது.  பின்னர், அவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, கல்லூரிப்படிப்பை முடித்து, லீத் நகரத்தில் தூய யோவான் ஆலயத்தில் தம் திருப்பணியை ஆரம்பித்தார்.  ஓய்வுநாட்பள்ளி ஊழியத்தில் விசேஷக் கவனம் செலுத்தி, சிறுவர்களுக்கேற்ற பாடல்கள் எழுதி, அவற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 1837ல் தமது முப்பதாவது வயதில் குரு அபிஷேகம் பெற்று, கெல்ஸோ (Kelso) என்னுமிடத்தில் சபைக் குருவாகப் பணியாற்றினார். சுமார் முப்பது ஆண்டுகள் கெல்ஸோவில் பணியாற்றியபின், எடின்பரோ நகருக்கு மாற்றப்பட்டு, ஸ்காட்லாண்டிலுள்ள சுய ஆளுகைச் சபைகளின் (Free Church of Scotland) ஐக்கியத்திற்காக வெகுவாக உழைத்தார்.  இச்சேவைக்காக 1883ல் அவர் அச்சபையின் பிரதம குரு (Moderator) என்னும் உயர் பதவியைப் பெற்றார். அவரது வாழ்க்கையில் அவருக்குப் பல துன்பங்கள் நேர்ந்தன. அவரது பிள்ளைகளில் ஐந்துபேர் இளவயதிலேயே இறந்தனர்.  அவர் மரிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னமே அவரது மனைவியும் மறுமைக்குள் சென்றார்.

”நல் மீட்பரே, உம்மேலே” என்னும் இப்பாடல், நியாயத்தீர்ப்புநாளின்போது மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு முறை நாம் பாவச்சேற்றில் சிக்கிக்கொள்ளும்போதும், ஆண்டவரிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டுச் சேர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.  அறுநூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதிய போனர், முதன்முதலில் எழுதியது ”நல் மீட்பரே, உம்மேலே” என்னும் இப்பாடல்தான் என்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.  இந்தப் பாமாலைக்கு, ‘சபையின் அஸ்திபாரம்’ பாடலுக்கு வழங்கப்பட்ட Aurelia என்னும் ராகமும் பொருத்தமானது.  அநேக திருச்சபைகளில் Aurelia ராகத்திலும் இது பாடப்படுகிறது.

இப்பாடலைத் தவிர அவர், ஏராளமான பாடல்களும், ஆங்கிலச் செய்யுள்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய இதர பாடல்களில் புகழ்பெற்றவை:

‘வா, பாவி, இளைப்பாற வா’ - பாமாலை 284
‘மயங்கும் தாசனை தேவா, நீர் நடத்தும்’ – பாமாலை 325
’நிரப்பும் என்னைத் துதியால்’ – பாமாலை 374

அவர் 1889ம் ஆண்டு, ஜூலை மாதம் 31ம் தேதி தமது 81வது வயதில் எடின்பரோ நகரில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    நல் மீட்பரே, உம்மேலே
என் பாவம் வைக்கிறேன்;
அன்புள்ள கையினாலே
என் பாரம் நீக்குமேன்;
நல் மீட்பரே, உம்மேலே
என் குற்றம் வைக்க, நீர்
உம் தூய ரத்தத்தாலே
விமோசனம் செய்வீர்

2.    நல் மீட்பரே, உம்மேலே
என் துக்கம் வைக்கிறேன்
இப்போதிம்மானுவேலே
எப்பாடும் நீக்குமேன்
நல் மீட்பரே, உம்மேலே
என் தீனம் வைக்க நீர்
உம் ஞானம் செல்வத்தாலே
பூரணமாக்குவீர்

3.    நல் மீட்பரே, உம்பேரில்
என் ஆத்மா சார, நீர்
சேர்த்து உம் திவ்விய மார்பில்
சோர்பெல்லாம் நீக்குவீர்;
நேசா! இம்மானுவேலே!
இயேசென்னும் நாமமும்
உகந்த தைலம்போலே
சுகந்தம் வீசிடும்

4.    நல் மீட்பரே, பாங்காக
அன்போடு சாந்தமும்
நீர் தந்தும் சாயலாக
சீராக்கி மாற்றிடும்;
நல் மீட்பரே, உம்மோடு
பின் விண்ணில் வாழுவேன்;
நீடூழி தூதர் பாட,
பாடின்றிப் பூரிப்பேன்

Post Comment

No comments:

Post a Comment