Saturday, August 11, 2012

பாமாலை 261-எல்லாருக்கும் மா உன்னதர் (Diadem)

பாமாலை 261 – எல்லாருக்கும் மா உன்னதர்
(All hail the power of Jesus name)

‘ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா’ என்னும் நாமம் ….. எழுதப்பட்டிருந்தது. வெளி 19:19

இயேசுவின் ‘மகுடாபிஷேகக் கீதம்’ (Coronation Hymn) என்றழைக்கப்படும் இப்பாடல் எழுதப்படுவதற்குத் தூண்டுதலாயிருந்தது, லண்டன் மாநகருக்கு இருபது மைல்களுக்குத் தெற்கில் சுண்ணாம்புப் பாறைகளின் உச்சியில் எழுப்பப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான சிலுவையாகும்.  இப்பாறைகள் ஷோர்ஹம் என்னும் ஒரு குக்கிராமத்தில் இருந்தன.  சிலுவைக்கடியில் ஒரு சிறிய ஆலயமுமிருந்தது.  இவ்வாலயத்தில் போதகராக வின்சென்ட் பெரோனே (Vincent Perronet) என்பவர் பல ஆண்டுகளாக உழைத்தார். 
அவரது புதல்வரான எட்வர்ட் பெரோனே (Edward Perronet) சிறுவனாக இருக்கும்போது ஆலயத்தின் முன்நின்று சிலுவையைக் கண்ணுற்று, இயேசுவின் தியாகத்தை உணர்ந்தார்.  இவ்வுணர்ச்சி அவர் ஆயுள் முழுவதும் அவரைத் தன் ஊழியத்தில் ஊக்குவித்ததென அவரே கூறியுள்ளார்.  பல ஆண்டுகளுக்குப் பின் அவர் போதகராயிருக்கும்போது ஆங்கிலக் கவிகள் எழுதலானார்.  அப்போது அவர் இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தி எழுதிய ஒரு கவியே, ’எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகத் திகழ்கின்றது.

இப்பாடலை எழுதிய எட்வர்ட் பெரோனே 1726ம் ஆண்டு இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தில் பிறந்தார். அவரது தந்தை, ‘மெதடிஸ்டு சபையின் பிரதம அத்தியட்சர்’ என வேடிக்கையாக அழைக்கப்பட்டார். ஏனெனில் மெதடிஸ்டு சபையை ஏற்படுத்திய வெஸ்லி சகோதரருக்கு அவர் மிகுந்த ஆதரவளித்துவந்தார். பெரோனே 1749ம்ல் ஜான் வெஸ்லியுடன் சுற்றுப்பயணம் ஆரம்பித்து, எட்டு ஆண்டுகள் சுற்றுப் பிரசங்கியாக உழைத்தார்.  பின்னர், ஆங்கிலத் திருச்சபையைத் தாக்கி உபந்நியாசங்கள் செய்ததாலும், அதைத் தாக்கி ஒரு புத்தகம் எழுதியதாலும், வெஸ்லி சகோதரர்களுடன் அவருக்கிருந்த நட்பு 1771ல் அற்றுப்போயிற்று. அதன்பின், ஹண்டிங்டன் சீமாட்டி (The Countess of Huntingdon) அவரைத் தன் வீட்டுக் குருவாக (Chaplain) வைத்துக்கொண்டார்.  ஆனால் அவர் திரும்பவும் ஆங்கிலச் சபையைத் தாக்கிக்கொண்டேயிருந்ததால், சீமாட்டியின் ஆதரவும் அவருக்கு இல்லாமல் போயிற்று  ஆதலால் அவர் பல சபைகளில் மாறி மாறி ஊழியம் செய்து, இறுதியில் கந்தர்புரியிலுள்ள (Canterbury) ஒரு சபை ஆளுகைச் சபையில் (Congregational Church) போதகராக அமர்ந்தார்.

James Ellor
(Music : Diadem Tune)
எட்வர்ட் பெரோனே ஒரு சிறந்த கவிஞர்.  அவர் ஆங்கிலக் கவிகளடங்கிய மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். இதிலுள்ள ஒரு கவியே ‘எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகும். இது முதல் முதலாக 1779ல் ‘Gospel Magazine’ என்னும் சுவிசேஷப் பத்திரிக்கையில், ‘Miles Lane’ என்னும் ராகத்துடன் வெளியிடப்பட்டது.  இந்த ராகத்தையே நாம் தற்போது இப்பாடலுக்கு உபயோகிக்கிறோம்.  இந்த ராகத்திற்கு இரட்சணியசேனையார் ஓர் அழகிய பல்லவியையும் சேர்த்துப் பாடுகின்றனர்.  இப்பாடலுக்கு, ‘Diadem’, ‘Coronation’ என்னும் வேறு இரு ராகங்களும் உண்டு.


எட்வர்ட் பெரோனே 1792ம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ம் தேதி, தமது 66வது வயதில் காலமானார்.  அவர் ஆங்கிலத் திருச்சபையைப் பலமாகத் தாக்கியிருந்தபோதிலும், கந்தர்புரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano





1.  எல்லாருக்கும் மா உன்னதர்
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தெய்வ மனிதர்
நீர் வாழ்க, இயேசுவே.

2.  விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே.

3.  பிசாசு, பாவம் உலகை
உம் சாவால் மிதித்தே
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே.

4.  நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.

5.  விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.

Post Comment

No comments:

Post a Comment