Sunday, July 31, 2016

பாமாலை 244 - பார் முன்னணை (Mueller)

பாமாலை 244 – பார் முன்னணை ஒன்றில்
(Away in a Manger)

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2 : 7


James R Murray
இந்தப் பாடல் அமெரிக்க தேசத்தில் உருவானதாகக் கூறப்படுகிறது.  பாடலை இயற்றியவர் யார் என்ற குறிப்புகள் எங்கும் இல்லை. பாடலை இயற்றியவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்று ஒரு சில புத்தகங்களில் குறிப்புகள் உள்ளபோதும், அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பல ஆய்வுகள் இக்கூற்றை மறுக்கின்றன. இப்பாடல் முதன்முதலில் 1885ம் ஆண்டு, வட அமெரிக்காவில் உள்ள Evangelical Lutheran ஆலயத்தின் வெளியீடான Little Children’s Book for Schools and Families என்ற பாடல் புத்தகத்தில் முதல் இரண்டு கவிகளை மாத்திரம் கொண்டு வெளியிடப்பட்டது.  இவ்விரு கவிகளையும் இயற்றியவர் யாரென்ற குறிப்பு அப்புத்தகத்திலும் இல்லை.  இருப்பினும், இப்பாடலின் மூன்றாவது கவியை John Thomas McFarland என்பவர் எழுதியுள்ளதாக பல்வேறு பாடல்புத்தகங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  இப்பாடல் இரு வேறு ராகங்களில் பாடப்படுகின்றன.  இப்பதிவில் உள்ள ராகத்தை (Tune : Mueller) James R Murray (1841-1905) என்பவர் மெட்டமைத்தார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள் தாம்.

2.            மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3.            என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

Away in a Manger (Tune : Mueller)

Post Comment

Sunday, July 24, 2016

பாமாலை 358 - மெய்ச் சமாதானமா

பாமாலை 358 – மெய்ச் சமாதானமா துர் உலகில்?
(Peace perfect Peace)

‘நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’. ஏசாயா 26:3

பெத்லகேமில் இயேசு பிறந்தபோது பரமசேனையின் திரள் தோன்றி, ‘பூமியிலே சமாதானம் உண்டாவதாக’ எனப்பாடினர்.  நமதாண்டவர் உயிரோடெழுந்தபின் சீஷருக்குத் தோன்றி ‘உங்களுக்கு சமாதானம்’ என்றார். வேதபுத்தகத்தில் எத்தனையோ இடங்களில், ‘சமாதானம்’ என்னும் பதம் சொல்லப்பட்டிருக்கிறது.  மலைப்பிரசங்கத்தில் ஆண்டவர், ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்’ என்று கூறினார். உலகம் உண்டானது முதல் மனிதன் சமாதானத்தைத் தேடிக்கொண்டேயிருக்கிறான்.  யுத்தங்களின் முடிவில் சமாதான உடன்படிக்கைகள் செய்யப்படுகின்றன.  முதல் உலகமகா யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது.  ஆனால் இந்த உடன்படிக்கையே இரண்டாம் உலகமகா யுத்தத்துக்குக் காரணமாயிருந்தது.  ஆகவே, உண்மையான சமாதானம் இதுவரை உலகத்தில் காணப்படவேயில்லை. ‘மெய்சமாதானமா துர் உலகில்’? என்னும் பாடலில், இயேசுவின் மூலமாகவே நாம் மெய்சமாதானம் அடைய முடியும் எனக்காண்கிறோம்.

Edward Henry Bickersteth, Jr.
(Pic Thanks : Cyberhymnal)
1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஹாம்ஸ்டெட் நகரிலுள்ள கிறிஸ்து ஆலயத்தின் போதகரான பிக்கர்ஸ்டெத் (Edward Henry Bickersteth, Jr.) என்பவர், ஹாரோகேட் (Harrogate, England) நகரில் தம் குடும்பத்தோடு ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தார்.  ஓய்வுநாளில் ஆலய ஆராதனைக்குச் சென்றார். அவ்வாராதனையில் கிப்பன் என்னும் பிரதமகுரு (Canon Gibbon) ‘நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’ ஏசா : 26:3 என்னும் வசனத்தில் பிரசங்கம் செய்தார். அதில், மூலமொழியான எபிரேய மொழியில் ‘சமாதானம் சமாதானம்’ என இருமுறை எழுதப்பட்டிருப்பதும், ஆங்கிலத்தில் ‘பூரணசமாதானம்’ என்னும் பொருள் கொண்ட ‘Perfect Peace’ என மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் விளக்கினார்.  இதை சிந்தித்துக்கொண்டே போதகர் வீடு வந்து சேர்ந்தார். அன்று மாலையில், மரணப்படுக்கையிலிருந்த தன் இனத்தவரான ஹில் போதகரைப் பார்க்கச் சென்றார். நோயாளி மனசமாதானமின்றி கலக்கமடைந்தவராக காணப்பட்டதால் அருகிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து, ‘மெய்சமாதானம் உலகில்” என்னும் பாடலை உடனே எழுதி, நோயாளிக்குப் படித்துக் காண்பிக்கவே, அவர் மிகுந்த ஆறுதல் பெற்றார். பின்பு வீட்டுக்குச் சென்று, மாலை உணவுக்கு அமர்ந்தார்.  ஓய்வுநாள் மாலை உணவின்போதும் அவர் வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் ஒரு பாடல் மனப்பாடமாக ஒப்பிக்கச் செய்து, தானும் ஒரு பாடலை ஒப்பிப்பது வழக்கம். அன்று அவர், தான் புதிதாக எழுதிய ‘மெய்சமாதானமா துர் உலகில்?’ என்னும் பாடலையும் படித்துக்காட்டினார். சில தினங்களுக்குப்பின் அவரது சகோதரி, இப்பாடலில் சரீர வேதனையை குறித்த வரிகள் இல்லையே என சுட்டிக்காட்டினார். உடனே போதகர் அங்கு கிடந்த ஒரு காகிதக்கூட்டின் பின்புறம் அதைக்குறித்த ஒரு கவியை எழுதிக்காட்டினார். அது அப்பாடலுக்கு எட்டாவது கவியாகும்.  ஆனால் ஏதோ காரணத்தால் இப்பாடலில் அது சேர்க்கப்படவில்லை.  இப்பாடலின் ஒவ்வொரு கவியிலும் முதல் வரி ஒரு கேள்வியாகவும், இரண்டாம் வரி அதின் பதிலாகவும் அமைந்திருப்பதால் அதின் ராகமும் அதற்கேற்றதாகவே அமைந்திருக்க வேண்டுமெனப் போதகர் விரும்பினார். ஆனால் அத்தகைய ராகம் அமைக்கப்படவில்லை.

இப்பாடலை எழுதிய எட்வர்ட் ஹென்றி பிக்கர்ஸ்டெத் 1825ம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தார். அவரது முன்னோர்கள் பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்கள். அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திரித்துவக்கல்லூரியில் பயின்று, பி.ஏ., எம்.ஏ., பட்டங்களைப் பெற்றார். 1848ம் ஆண்உ குருத்துவ அபிஷேகம் பெற்று, பானிங்ஹம், நார்டோக், டன்ப்ரிட்ஜ்வெல்ஸ் முதலிய இடங்களில் உதவிக்குருவாக ஊழியம் செய்தார்.  பின்னர், ஹின்டன் மார்ட்டல், ஹாம்ஸ்டெட், கிளஸ்டர் என்னுமிடங்களில் தலைமைக்குருவாகப் (Vicar) பணியாற்றினார்.  1885 முதல் 1900 வரை எக்ஸிட்டர் மாகாணத்தின் அத்தியட்சராக ஊழியம் செய்து ஓய்வு பெற்றார்.  அவரது குருத்துவ வாழ்க்கையில் அவர், பிரசங்கங்கள், பாடல்கள், கிறிஸ்தவ செய்யுள்கள் அடங்கிய பன்னிரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.

அவர் 1906ம் ஆண்டு, மே மாதம், 16ம் தேதி தமது 81ம் வயதில் லண்டன் மாநகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            மெய்ச் சமாதானமா துர் உலகில்?
ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்

2.    மெய்ச் சமாதானமா பல் தொல்லையில்?
ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில்.

3.    மெய்ச் சமாதானமா சூழ் துக்கத்தில்?
ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்.

4.    மெய்ச் சமாதானமா உற்றார் நீங்கில்?
ஆம், இயேசு கரம் நம்மைக் காக்கையில்.

5.    மெய்ச் சமாதானமா சிற்றறிவில்?
ஆம், இயேசு ராஜன் என்று அறிகில்.

6.    மெய்ச் சமாதானமா சா நிழலில்?
ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்.

7.    பூலோக துன்பம் ஒழிந்த பின்னர்.
இயேசு மெய்ச் சமாதானம் அருள்வர்.

Post Comment

Wednesday, July 6, 2016

பாமாலை 359 - அன்பே விடாமல் சேர்த்து

பாமாலை 359 – அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
(O Love that will not let me go)

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும்,  அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்’. யோபு 13 : 15

பக்தன் யோபுவின் சரித்திரம் நமக்குப் புதிதானதல்ல. அவன் தன் வாழ்க்கையில் எத்தனையோ விதமான இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. சாத்தான் அவனைப் பலவிதமான சோதனைகளுக்குட்படுத்தி, அவனுடைய விசுவாசத்தைப் பரீட்சை பார்த்தான்.  யோபுவின் வாழ்க்கையில் அவனுக்கு சந்தோஷத்தை உண்டாக்கின எல்லாவற்றையும் அவன் இழக்க நேரிட்டது.  அவனுடைய மனைவியும் சிநேகிதரும் அவனை கடவுளுடைய பாதையிலிருந்து விலகத்தூண்டினர்.  ஆயினும் யோபு மறுமொழியாகச் சொன்னது, ‘அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்’.  நமது வாழ்விலும், சந்தோஷம் காலங்களிலும் கடவுளிடம் அன்பும், நம்பிக்கையும் கொள்வது சிரமமல்ல.  ஆனால் இன்னல்களும் இடுக்கண்களும் நம்மை நெருக்கும்போது, ஆண்டவரின் அன்பை மறந்துவிடாமல், அவரும் நம்மோடு அனுதாபப்படுகிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்வோமாக.

George Matheson
Pic Thanks : Wiki
இப்பாடலை எழுதிய ஜார்ஜ் மாத்தீசன் (George Matheson) என்பவர் குருடனாயிருந்து, பல மன வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது இதை எழுதினார்.  அவர் ஒரு பெண்ணைக் காதலித்து, மணநாள் நெருங்கும்போது அவர் கண்பார்வையை இழந்ததால் அப்பெண் அவரை மணந்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மனவேதனையால் அவர் இப்பாடலை எழுதினாரென்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இப்பாடலின் முதல் கவியும், மூன்றாவது கவியும் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் சிலகாலத்திற்கு முன் அவரது தங்கையான குமாரி மாத்தீசனைக் கேட்டபோது, அவர் இளவயதிலேயே மங்கின பார்வையுடையவராயிருந்து, சுமார் பதினெட்டு வயதில் கண்பார்வை இழந்ததாகவும், அவர் நாற்பது வயதாயிருக்கையில்தான் இப்பாடல் எழுதப்பட்டது என்றும் கூறியுள்ளார்.  ஆதலால் மேற்கூறிய கதை வெறும் கட்டுக்கதை என்பது திண்ணம்.  எனினும் தனக்கு அருமையான ஒருவரது மரணத்தாலும், மற்றும் சில காரணங்களாலும், அதிகமான வேதனையடைந்து, அதை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில், திடீரென இப்பாடல் அவர் மனதில் உருவானதாகவும், சில நிமிடங்களில் இதை எழுதி முடித்ததாகவும் அவரே கூறியுள்ளார்.

ஜியார்ஜ் மாத்தீசன் 1842ம் ஆண்டு, மார்ச் மாதம் 27ம் தேதி, ஸ்காட்லாண்டு நாட்டில், கிளாஸ்கோ (Glasgow, Scotland) நகரில் தனவந்தரான ஒரு வியாபாரியின் மகனாகப் பிறந்தார்.குழந்தைப் பருவத்திலிருந்தே மங்கின பார்வையுடையவராயிருப்பினும், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் (University of Glasgow) பயின்று, 1862ம் ஆண்டில், ‘எம்.ஏ’ பட்டம் பெற்றார். 1866ல் கிளாஸ்கோ நகரில் சாண்டிபோர்ட் ஆலயத்தில் உதவிகுருவாகத் தம் ஊழியத்தை ஆரம்பித்தார்.  இரு ஆண்டுகளுக்குப்பின், இன்னிலான் என்னும் ஊரில் ஒரு தனிச்சபைக் குருவாக நியமிக்கப்பட்டார். அவரது பிரசங்கத்திறமை பரவவே, 1886ல் எடின்பரோ நகரில் சுமார் இரண்டாயிரம் அங்கத்தினர் கொண்ட தூய பர்னார்டு ஆலயத்தின் (St. Bernard's Parish Church) குருவாக நியமனம் பெற்று, பதிமூன்று ஆண்டுகள் அங்கு ஊழியம் செய்தார். கண்பார்வை இல்லாததால் அவர் செய்ய ஆசித்த வேத ஆராய்ச்சிகளைச் செய்ய முடியவில்லை.  ஆயினும், வேதசாஸ்திர சம்பந்தமாக அவர் பதினேழு சிறந்த புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது வேத சாஸ்திரத்திறமைக்காக பண்டிதர் (Doctor of Divinity) பட்டமும், வேறு பல பட்டங்களும் பெற்றார்.

Albert Lister Peace
‘அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்’ என்ற பாடல் 1882ல் மேற்கூறிய சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டது.  இப்போது இது பல பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, சங்கீதப் பண்டிதர் டாக்டர். ஆல்பர்ட் பீஸ் (Albert Lister Peace) என்பவரால் எழுதப்பட்ட ‘St. Margaret’ என்னும் அழகிய இராகத்தில் பாடப்பட்டு வருகிறது.

அவர் 1906ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 28ம் தேதி, தமது 64ம் வயதில், ஸ்காட்லாண்ட் நாட்டில் போர்த் நகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.

2.            ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

3.            பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
‘விடியுங்காலை களிப்பாம்!’
உம் வாக்கு மெய் மெய்யே.

4.            குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.

O Love that wilt not let me go

Post Comment

Friday, July 1, 2016

பாமாலை 339 - என் மீட்பர் ரத்தம் சிந்தினார் (Solid Rock)

பாமாலை 339 – என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
(My hope is built on nothing less)
Tune : Solid Rock

‘கர்த்தரோ, எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்’. சங் 94:22

வேதபுத்தகத்தில் கன்மலையும், கற்பாறையும் உறுதிக்கும், அழியாமைக்கும் அடையாளமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.  நமதாண்டவர் கற்பாறையின்மேல் கட்டப்பட்டிருக்கிற வீட்டையும், மணலின்மேல் கட்டப்பட்டிருக்கிற வீட்டையும் ஒப்பிட்டு, கற்பாறையின்மேல் வீட்டைக் கட்டுகிறவன் புத்தியுள்ளவன் எனக் குறிப்பிடுகிறார் (மத் 7:24).  சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையில் தோண்டி வைக்கும் குழிமுசல்கள், ஞானமுள்ளவனுகு உதாரணமாகக் கூறப்பட்டிருக்கிறது (நீதி 30:26). ஆகவே, நமது விசுவாசமும், நம்பிக்கையும் உறுதியானதும், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவருமான இயேசு கிறிஸ்து என்னும் கற்பாறையின்மேல் அஸ்திபாரப்படுத்தப்பட வேண்டும்.  காலை நிலைகள் எப்படி மாறினாலும், வீட்டின் அஸ்திபாரம் கற்பாறையின்மேல் இருந்தால் அது சேதமடையாதது போல, நம் வாழ்க்கையில் எந்த நிலைமை ஏற்பட்டாலும், நாம் சோர்ந்துபோனாலும், மரணம் நம்மை ஆட்கொண்டாலும், நாம் நிற்கும் பாறை கிறிஸ்துவாயிருந்தால், நாம் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை.

Edward Mote
இப்பாடலை எழுதிய எட்வர்ட் மோட் (Edward Mote) என்பவர் 1797ம் ஆண்டு, இங்கிலாந்தில் லண்டன் மாநகருக்கருகில் ஒரு சிறிய கிராமத்தில் எளிய பெற்றோருக்குப் பிறந்தார்.  வாழ்க்கையை மிகவும் எளிமையான நிலையில் ஆரம்பித்து, இளமையில் கூலி வேலை செய்தார். பின்னர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, வேத சாஸ்திரப் பயிற்சியடைந்து, ஒரு பாப்ட்டிஸ்ட் சபையில் போதகராக அபிஷேகம் பெற்று ஊழியம் செய்தார். தமது ஊழியத்தின் கடைசி இருபது ஆண்டுகளாக ஸசக்ஸ் மாகாணத்தில், ஹார்ஷம் நகரில் (Horsham, Sussex) போதகராகப் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் அவர் தாழ்மையான நிலையிலிருந்தாலும், கிறிஸ்தவப் பாடல்கள் பாடுவதிலும், கவிகள் எழுதுவதிலும் அதிக ஆர்வமுள்ளவர். ஒருநாள் காலையில் அவர் வேலைக்குச் செல்லும்போது, ஓர் உண்மையான கிறிஸ்தவனின் ஆவிக்குரிய அனுபவங்களைக் குறித்த ஒரு பாடல் எழுத ஆர்வம் கொண்டார். வேலை ஸ்தலத்தை அடையுமுன், ‘நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான், வேறஸ்திபாரம் மணல்தான்’ என்னும் பல்லவி அவர் மனதில் உருவாயிற்று.  அன்று சாயங்காலத்துக்குள், முதல் நான்கு கவிகளையும் எழுதி முடித்தார். மறு ஓய்வுநாள் காலையில் ’லைல்’ என்னும் தெருவில் நடந்த ஓர் எழுப்புதல் கூட்டத்திற்குச் சென்றார்.  கூட்டம் முடிந்து வெளியில் வரும்போது, கிங் என்னும் அவரது நண்பர், சுகவீனமாயிருந்த தனது மனைவியைப் பார்க்க வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  மறுநாள் காலையில், மோட் தனது நண்பரின் மனைவியைப் பார்க்கச் சென்றார்.  இவ்விதச் சந்திப்புகளில் அவர் முதலில் ஒரு பாட்டைப் பாடி, பின் வேதபாகம் வாசித்து ஜெபிப்பது வழக்கம். பாட்டுப்புத்தகத்தை தேடி, அது கிடையாதலால், அவர் புதிதாக எழுதிய ‘என் மீட்பர் ரத்தம் சிந்தினார்’ என்னும் பாடலை சட்டைப் பையிலிருந்து எடுத்து அதைப் பாடினார்.  நோயாளி அதைக் கேட்டு அதிக ஆறுதலும், அமைதியும் பெற்று, அப்பாடலின் ஒரு பிரதி வேண்டுமென்றார்.  அன்றிரவே மோட் கடைசி இரண்டு கவிகளையும் எழுதி, மரணப் படுக்கையிலிருந்த கிங் அம்மையாருக்கு அனுப்பினார்.

ஒரு நோயாளிக்கு இப்பாடல் மிகுந்த ஆறுதலை அளித்தது என்று கண்ட மோட், இப்பாடலின் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டுப் பலருக்கும் அனுப்ப, அவை மிகவும் பிரியமாக வரவேற்கப்பட்டன. பின்னர், ‘Spiritual Magazine” என்னும் பத்திரிக்கையிலும் இப்பாடல் பிரசுரமானது.  மோட் ஆறு கவிகள் எழுதினார்.  ஆனால் நமது பாட்டுப்புத்தகங்களில் நான்கு கவிகள்தான் உள்ளன.  1836ல் அவர் இயற்றிய ‘ஸ்தோத்திரப் பாடல்கள்’ (Hymns of Praise) என்னும் புத்தகத்தில், ‘பாவியின் உறுதியான நம்பிக்கை’ என்னும் தலைப்பில் இப்பாடல் காணப்படுகிறது.

எட்வர்ட் மோட் 1874ம் ஆண்டு, தமது 77ம் வயதில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.

2.    கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்
மாறாதவர் என்றறிவேன்
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.

3.    மரண வெள்ளம் பொங்கினும்
என் மாம்சம் சோர்ந்துபோயினும்,
உம் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.

4.    நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.

My Hope is built on nothing less

Post Comment