Thursday, June 9, 2016

பாமாலை 386 - சர்வத்தையும் அன்பாய்

பாமாலை 386 – சர்வத்தையும் அன்பாய்
(Now thank we all our God)

‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்” எபே 5:20, 21

கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளை எப்போதும் ஸ்தோத்திரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இப்பாடலின் முதல் கவியில் ஆங்கிலத்தில், “Now thank we all our God, with hearts and hands and voices’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.  நமது இதயத்தினாலும், கைகளினாலும், நாவினாலும், நாம் கடவுளை ஸ்தோத்திரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.  ஒருவேளை நமது நாவினால் ஸ்தோத்திரிக்கச் சந்தர்ப்பம் கிடையாவிடினும், நமது சிந்தனையில் எப்போதும் ஸ்தோத்திரம் செலுத்தலாம்.  கடவுள் நமக்கு அருளின எந்த வேலையானாலும், நமது கைகளால் அதை முழு பலத்தோடு செய்வதால், அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தலாம்.  மேலும் நமது நாவினால் அடிக்கடி பாடல்களினாலும், ஜெபங்களினாலும் ஸ்தோத்திரிக்க ஏவப்படுகிறோம்.  ஆனால் இந்த ஸ்தோத்திரம் உண்மையானதுதானா? ‘அநேக நன்மையால்’ நம்மை ஆட்கொண்ட தேவனை ஏகமாய் ஸ்தோத்திரிக்கிறோமா?

Martin Rinckart
Pic Thanks : Wiki
இப்பாடலை எழுதிய மார்ட்டிங் ரிங்கார்ட் போதகர்  (Martin Rinckart) 1586ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 23ம் தேதி, ஜெர்மனி நாட்டில், ஸாக்ஸனி மாகாணத்தில் எய்லன்பர்க் நகரில் (Saxony, Eilenburg) பிறந்தார்.  இளவயதில் எய்லன்பர்க் நகரிலும், பின்னர் லீப்ஸிக் (Leipzig) பல்கலைக்கழகத்திலும் உபகாரச் சம்பளம் பெற்று கல்வி பயின்றார்.  1517ல் அத்தியட்சர் பதவிக்கு சமமான ‘ஆர்கிடயக்கானஸ்’ என்னும் உயர் பதவியைப் பெற்று, தன் ஆயுள் முழுவதும் எய்லன்பர்க் நகரிலேயே போதகராகத் திருப்பணியாற்றினார்.

1618ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் ஆரம்பித்து, ஏறக்குறைய ஐரோப்பா முழுவதும் பரவிய முப்பதாண்டு போரில் ஆயிரகணக்கான மக்கள் மாண்டனர்.  இப்போரில் எய்லன்பர்க் நகரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.  அண்டையிலுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான அகதிகள் நகருக்குள் நுழைந்ததால் பிளேக் வியாதி பரவி எட்டாயிரத்துக்கதிமான பேர் மாண்டனர்.  இதில் ரிங்கார்ட் போதகரின் மனைவியும் ஒருவர்.  அந்நகரில் ரிங்கார்ட் போதகரைத் தவிர மற்றெல்லாப் போதகர்களும் இறந்தனர்.  ஆகவே, இறந்தவர்களை அடக்கம் செய்வது இவரது கடமையாயிற்று.  தினந்தோறும் ஐம்பது பேருக்கதிகமானவர்களை அவர் அடக்கம் செய்ய நேர்ந்தது.  வியாதியைத் தவிர, உணவுப் பஞ்சமும் நகரை வெகுவாகப் பாதிக்கலாயிற்று.

முப்பது ஆண்டுகளுக்குப் பின், 1648ல் யுத்தம் முடிந்து, ‘வெஸ்டுபேலியா சமாதான உடன்படிக்கை’ கையெழுத்திடப்பட்டது.  ஸாக்ஸனி மாகாணத்தின் அதிபர் (Elector of Saxony) எல்லா ஆலயங்களிலும் ஸ்தோத்திர ஆராதனைகள் நடத்தப்படவேண்டுமென்றும், அவ்வாராதனைகளில், ‘நாம் யாவரும் இப்பொழுது கர்த்தருக்குத் துதி செலுத்துவோமாக;
Catherine Winkworth
Pic Thanks : Wiki
அவர் பெரிதான காரியங்களை நமக்குச் செய்தாரே, நல்ல நாட்களை நமக்கு உருவாக்கி தம்முடைய மிகுந்த தயவினாலே நம்மை ஆதரித்தார்.  சந்தோஷமும் நன்றியறிதலுமான இருதயத்தை அவர் நமக்குத் தந்து, எப்போதும் சமாதானம் கட்டளையிடுவாராக’ என்னும் வசனத்தில் குருமார் பிரசங்கம் செய்யவேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தார். இந்த வசனம் நமது வேதபுத்தகத்தில் சேர்க்கப்படாத, ‘அப்போக்கிரிப்பா’ என்னும் பகுதியில், ‘எக்ளீஸ்டியாஸ்டிக்கஸ்’ ஆகமத்தில், 50ம் அதிகாரம், 22ம் வசனமாகும்.  ரிங்கார்ட் போதகர் தமது சபையில் ஸ்தோத்திர ஆராதனையில் பிரசங்கம் செய்வதற்காக இவ்வசனத்தை ஆழ்ந்து சிந்திக்கையில், ‘சர்வத்தையும் அன்பாய்’ என்னும் பாடல் அவர் மனதில் உற்பத்தியானது.  உடனே அதை எழுதி, அதற்கேற்ற ஓர் ராகத்தையும் அமைத்து, தமது ஸ்தோத்திர ஆராதனையில் பாடச்செய்தார்.  இது ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருந்தது.  பல ஆண்டுகளுக்குப்பின் காதரீன் உயிங்க்வர்த் (
Catherine Winkworth) அம்மையார் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 
Johann Crüger
(Pic Thanks: Wiki)
இப்போது இப்பாடல் ஏராளமான பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஜான்க் ரூகர் (
Johann Crüger) என்பவரால் எழுதப்பட்ட ‘Nun danket’ என்னும் ராகத்தில் உலகமெங்கும் ஒரு ஸ்தோத்திரப் பாடலாக பாடப்பட்டு வருகிறது. மக்கள் பல இன்னல்களுக்குட்பட்டு, அவற்றிலிருந்து விடுதலை பெறும்போதும், ஒரு ஆண்டை முடித்து, புது ஆண்டுக்குள் பிரவேசிக்கும்போதும் இப்பாடலைப் பாடுகிறோம்.

ரிங்கார்ட் போதகர் ஒரு சங்கீதப் பிரியர்.  ஏராளமான பாடல்களும், செய்யுள்களும், ராகங்களும் இயற்றியுள்ளார்.  அவர் 1649ம் ஆண்டு தமது 63ஆம் வயதில் காலமானார்.




1.            சர்வத்தையும் அன்பாய்
காப்பாற்றிடும் கர்த்தாவை
அநேக நன்மையால்
ஆட்கொண்ட நம் பிரானை
இப்போது ஏகமாய்
எல்லாரும் போற்றுவோம்
மா நன்றி கூறியே
சாஷ்டாங்கம் பண்ணுவோம்.

2.    தயாபரா, என்றும்
எம்மோடிருப்பீராக;
கடாட்சம் காண்பித்து
மெய் வாழ்வை ஈவீராக
மயங்கும் வேளையில்
நேர்பாதை காட்டுவீர்;
இம்மை மறுமையில்
எத்தீங்கும் நீக்குவீர்.

3.    வானாதி வானத்தில்
என்றென்றும் அரசாளும்
திரியேக தெய்வத்தை
விண்ணோர் மண்ணோர் எல்லோரும்
இப்போதும் எப்போதும்
ஆதியிற் போலவே
புகழ்ந்து ஸ்தோத்திரம்
செலுத்துவார்களே.

Post Comment

No comments:

Post a Comment