Friday, July 1, 2016

பாமாலை 339 - என் மீட்பர் ரத்தம் சிந்தினார் (Solid Rock)

பாமாலை 339 – என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
(My hope is built on nothing less)
Tune : Solid Rock

‘கர்த்தரோ, எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்’. சங் 94:22

வேதபுத்தகத்தில் கன்மலையும், கற்பாறையும் உறுதிக்கும், அழியாமைக்கும் அடையாளமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.  நமதாண்டவர் கற்பாறையின்மேல் கட்டப்பட்டிருக்கிற வீட்டையும், மணலின்மேல் கட்டப்பட்டிருக்கிற வீட்டையும் ஒப்பிட்டு, கற்பாறையின்மேல் வீட்டைக் கட்டுகிறவன் புத்தியுள்ளவன் எனக் குறிப்பிடுகிறார் (மத் 7:24).  சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையில் தோண்டி வைக்கும் குழிமுசல்கள், ஞானமுள்ளவனுகு உதாரணமாகக் கூறப்பட்டிருக்கிறது (நீதி 30:26). ஆகவே, நமது விசுவாசமும், நம்பிக்கையும் உறுதியானதும், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவருமான இயேசு கிறிஸ்து என்னும் கற்பாறையின்மேல் அஸ்திபாரப்படுத்தப்பட வேண்டும்.  காலை நிலைகள் எப்படி மாறினாலும், வீட்டின் அஸ்திபாரம் கற்பாறையின்மேல் இருந்தால் அது சேதமடையாதது போல, நம் வாழ்க்கையில் எந்த நிலைமை ஏற்பட்டாலும், நாம் சோர்ந்துபோனாலும், மரணம் நம்மை ஆட்கொண்டாலும், நாம் நிற்கும் பாறை கிறிஸ்துவாயிருந்தால், நாம் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை.

Edward Mote
இப்பாடலை எழுதிய எட்வர்ட் மோட் (Edward Mote) என்பவர் 1797ம் ஆண்டு, இங்கிலாந்தில் லண்டன் மாநகருக்கருகில் ஒரு சிறிய கிராமத்தில் எளிய பெற்றோருக்குப் பிறந்தார்.  வாழ்க்கையை மிகவும் எளிமையான நிலையில் ஆரம்பித்து, இளமையில் கூலி வேலை செய்தார். பின்னர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, வேத சாஸ்திரப் பயிற்சியடைந்து, ஒரு பாப்ட்டிஸ்ட் சபையில் போதகராக அபிஷேகம் பெற்று ஊழியம் செய்தார். தமது ஊழியத்தின் கடைசி இருபது ஆண்டுகளாக ஸசக்ஸ் மாகாணத்தில், ஹார்ஷம் நகரில் (Horsham, Sussex) போதகராகப் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் அவர் தாழ்மையான நிலையிலிருந்தாலும், கிறிஸ்தவப் பாடல்கள் பாடுவதிலும், கவிகள் எழுதுவதிலும் அதிக ஆர்வமுள்ளவர். ஒருநாள் காலையில் அவர் வேலைக்குச் செல்லும்போது, ஓர் உண்மையான கிறிஸ்தவனின் ஆவிக்குரிய அனுபவங்களைக் குறித்த ஒரு பாடல் எழுத ஆர்வம் கொண்டார். வேலை ஸ்தலத்தை அடையுமுன், ‘நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான், வேறஸ்திபாரம் மணல்தான்’ என்னும் பல்லவி அவர் மனதில் உருவாயிற்று.  அன்று சாயங்காலத்துக்குள், முதல் நான்கு கவிகளையும் எழுதி முடித்தார். மறு ஓய்வுநாள் காலையில் ’லைல்’ என்னும் தெருவில் நடந்த ஓர் எழுப்புதல் கூட்டத்திற்குச் சென்றார்.  கூட்டம் முடிந்து வெளியில் வரும்போது, கிங் என்னும் அவரது நண்பர், சுகவீனமாயிருந்த தனது மனைவியைப் பார்க்க வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  மறுநாள் காலையில், மோட் தனது நண்பரின் மனைவியைப் பார்க்கச் சென்றார்.  இவ்விதச் சந்திப்புகளில் அவர் முதலில் ஒரு பாட்டைப் பாடி, பின் வேதபாகம் வாசித்து ஜெபிப்பது வழக்கம். பாட்டுப்புத்தகத்தை தேடி, அது கிடையாதலால், அவர் புதிதாக எழுதிய ‘என் மீட்பர் ரத்தம் சிந்தினார்’ என்னும் பாடலை சட்டைப் பையிலிருந்து எடுத்து அதைப் பாடினார்.  நோயாளி அதைக் கேட்டு அதிக ஆறுதலும், அமைதியும் பெற்று, அப்பாடலின் ஒரு பிரதி வேண்டுமென்றார்.  அன்றிரவே மோட் கடைசி இரண்டு கவிகளையும் எழுதி, மரணப் படுக்கையிலிருந்த கிங் அம்மையாருக்கு அனுப்பினார்.

ஒரு நோயாளிக்கு இப்பாடல் மிகுந்த ஆறுதலை அளித்தது என்று கண்ட மோட், இப்பாடலின் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டுப் பலருக்கும் அனுப்ப, அவை மிகவும் பிரியமாக வரவேற்கப்பட்டன. பின்னர், ‘Spiritual Magazine” என்னும் பத்திரிக்கையிலும் இப்பாடல் பிரசுரமானது.  மோட் ஆறு கவிகள் எழுதினார்.  ஆனால் நமது பாட்டுப்புத்தகங்களில் நான்கு கவிகள்தான் உள்ளன.  1836ல் அவர் இயற்றிய ‘ஸ்தோத்திரப் பாடல்கள்’ (Hymns of Praise) என்னும் புத்தகத்தில், ‘பாவியின் உறுதியான நம்பிக்கை’ என்னும் தலைப்பில் இப்பாடல் காணப்படுகிறது.

எட்வர்ட் மோட் 1874ம் ஆண்டு, தமது 77ம் வயதில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.

2.    கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்
மாறாதவர் என்றறிவேன்
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.

3.    மரண வெள்ளம் பொங்கினும்
என் மாம்சம் சோர்ந்துபோயினும்,
உம் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.

4.    நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.

My Hope is built on nothing less

Post Comment

No comments:

Post a Comment