Wednesday, May 20, 2026

பாமாலை 278 - வாரும் தெய்வ ஆவி (வேறு வசனம்)

 பாமாலை 278 - வாரும் தெய்வ ஆவி (வேறு வசனம்)

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
SATB with Descant
Descant only


1. வாரும் தெய்வ ஆவி வாரும்
எங்கள் ஆத்துமத்திலே
எங்களுக்குயிரைத் தாரும்
வாரும் சுத்த ஆவியே
ஞான தீபம் ஞான தீபம்
ஸ்வாமி நீரே ஏற்றுமே

2. எங்கள் நெஞ்சில் நல்ல புத்தி
தெய்வ பக்தி தோன்றவே
அதை நீர் குணப்படுத்தி
தப்பு சிந்தை யாவுமே
மாற்ற வாரும் மாற்ற வாரும்
நல்ல தெய்வ ஆவியே

3. மோட்ச மார்க்கத்தைக் குறித்து
எவ்வகை தப்பெண்ணமும்
நீக்கி எங்களைத் தற்காத்து
நல்லோராக்கியருளும்
கால் தள்ளாமல் கால் தள்ளாமல்
பெலன் ஈந்து தாங்கிடும்

4. நெஞ்சு எங்களில் கலங்கி
நாயனே இரட்சியும்
என்று கெஞ்சும்போதிரங்கி
ஆற்றி தேற்றிக்கொண்டிரும்
துன்பம் நீங்க துன்பம் நீங்க
நீர் சகாயராயிரும்


Post Comment

Sunday, May 3, 2026

பாமாலை 362 - தெய்வன்புதான் மா (Innsbruck)

பாமாலை 362 - தெய்வன்புதான் மா (Innsbruck)
O Love Divine how sweet Thou art
Tune : Innsbruck

 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. தெய்வன்புதான் மா இனிமை
அதற்கென்றே என் உள்ளத்தை
கொடுத்திருக்கிறேன்
என் மீட்பர் அன்பின் அளவை
அறிவதே என் மகிமை
எப்போது அறிவேன்?

2. பாதாளம் சாவைப்பார்க்கிலும்
அவரின் நேசம் பலமும்
ஆழமுமானதே
பூலோகத்தார் எல்லாருக்கும்
மாட்சிமையுள்ள வானோர்க்கும்
எட்டாததாயிற்றே.

3. தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே
அளந்து பார்த்தவர் நீரே
அன்பின் ப்ரவாகத்தை
என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும்
இதே என் உள்ளம் வாஞ்சிக்கும்
தீராத வாஞ்சனை.

4.உம் திருமுகம் பார்ப்பதும்
உம்மண்டை நித்தம் சேர்வதும்
என் முழு வாஞ்சையாம்
உம் திவ்ய சத்தம் கேட்பது
எனக்கு இன்பம் களிப்பு
என் மோட்ச பாக்யமாம்.

Post Comment

Saturday, July 19, 2025

பாமாலை 20 - கர்த்தாவே மாந்தர் (Rest)

பாமாலை 20 - கர்த்தாவே மாந்தர்
Dear Lord and Father of Mankind
Tune : Rest

‘அக்கினிக்குப் பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று’. 1 இராஜாக்கள் 19 : 12

கிறிஸ்தவர்களாகிய நாம் நமது ஆலய ஆராதனைகளிலும், மற்றும் வழிபாடுகளிலும் பல வித்தியாசமான முறைகளை அனுசரித்து வருகிறோம்.  சில கிறிஸ்தவ வழிபாடுகளில் பாடப்படும் பாடல்களும், ஏறெடுக்கப்படும் ஜெபங்களும் மிகவும் அமைதியான முறையில் செய்யப்படுகின்றன.  சிலரது வழிபாடுகளில் கொட்டு முழக்கங்களும், கைதட்டுகளும் ஒலிக்கின்றன.  இன்னும் சில பகுதியினர் ஜெபம் செய்யும்போது இடையிடையே ‘ஆமென்’, ‘அல்லேலூயா’ என உரத்த சத்தமாய்ச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றனர்.  வேறு சில பிரிவினர் தங்கள் ஆராதனைகளில், பரிசுத்த ஆவியைப் பெற்று வேறு மொழிகளில் பேசுவதாக நம்பி, பலவிதமான சத்தங்களை உண்டுபண்ணுகின்றனர்.  ஆனால் 1 இராஜாக்கள் 19:11,12 வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதுபோல, பர்வதங்களைப் பிளக்கிறதும், கன்மலைகளை உடைக்கிறதுமான பெருங்காற்றிலும், காற்றுக்குப்பின் உண்டான பூமியதிர்ச்சியிலும், அதற்குப்பின் உண்டான அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை.  அக்கினிக்குப் பின் உண்டான அமர்ந்த மெல்லிய சத்தத்திலேயே கர்த்தர் காணப்பட்டார்.  ஆகவே நமது ஆராதனைகள் அமைதியானதாகவும், ஆரவாரங்களில்லாமலும் இருப்பதே சிறந்தது.

John Greenleaf Whittier
இப்பாடலை எழுதிய விட்டியர் (John G. Whittier) என்பவர் அமெரிக்காவில் நியூஹாம்ப்ஷயர் என்னுமிடத்தில் வசித்துவந்தார்.  அவரது ஊருக்கருகில் அடிக்கடிப் பல எழுப்புதல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.  இக்கூட்டங்களில் அதிகமான சத்தமும், சந்தடியும், ஆரவாரமும் உண்டாயின.  இக்கூட்டங்களை நடத்தியவர்கள், ஆரவாரத்துடன் நடக்கும் கூட்டங்களில்தான் உண்மையான இறையுணர்வு உண்டாகும் என நம்பினர்.  விட்டியர், Quakers என்னும் நண்பர் குழுவைச் (Society of Friends) சேர்ந்தவர்.  இக்குழுவினர், வாழ்க்கையில் ஆடம்பரமும் சொகுசும் இல்லாமல் ஜீவிப்பதே கடவுளுக்குப் பிரியமானது என நம்பினர்.  மேற்கூறிய எழுப்புதல் கூட்டங்களைப் பார்த்த விட்டியர், இதை ஆப்பிரிக்கர் இறையுணர்வு உண்டாவதற்காக ‘சோமா’ என்னும் மதுபானத்தைத் தயாரித்து அருந்துவதற்கு ஒப்பிட்டார்.  இதை அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கையில் உண்டாகும் நெருக்கடியான நிலைமைகளை மேற்கொள்ளத் தினம் சிறிதுநேரம் அமைதியாகக் கடவுளுடன் தரித்திருப்பது மிக அவசியம் என்பதை உணர்த்துவதற்காக, ‘The Brewing of Soma’ (சோமா மதுபானம் வடித்தல்) என்னும் தலைப்பைக் கொண்ட ஓர் ஆங்கிலச் செய்யுளை விட்டியர் 1872’ல் எழுதினார்.  இச்செய்யுளிலுள்ள சில கவிகளை 1884ல் காரட் ஹாடர் என்னும் ஆங்கிலப் பாடகர் ஒரு பாடலாகத் தொகுத்தார்.  இதுவே, ‘கர்த்தாவே மாந்தர் தந்தையே’ என்னும் பாடலாகும்.

இப்பாடலை எழுதிய ஜான் கிரீன்லீப் விட்டியர் (John Greenleaf Whittier), 1807ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 17ம் தேதி அமெரிக்காவில் ஹேவர்ஹில் (Haverhill, Massachusetts) என்னுமிடத்தில் பிறந்தார்.  இவரது தந்தை, ‘உவேக்கர்’ பிரிவைச் சேர்ந்த ஒரு விவசாயி.  விட்டியர் இளவயதில் கடுமையான வேலை செய்யவேண்டியிருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் குன்றியது.  ஓய்வு நேரங்களில் அவர் செருப்புத் தைக்கக் கற்றுக்கொண்டு, பள்ளிக்குச் செல்வதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்தார்.  பத்தொன்பதாவது வயதில் அவ்வூரிலுள்ள ஒரு கல்வி நிலையத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகள் கல்வி கற்றார்.  இங்கிருக்கையில் ஆங்கிலக்கவிஞரான, ‘ராபர்ட் பர்ன்ஸ்’ என்பவரின் செய்யுள்களால் கவரப்பட்டுத், தாமும் பல செய்யுள்கள் எழுதினார். மேலும், அடிமை ஒழிப்பு இயக்கத்தில் சேர்ந்து அதைக்குறித்துப் பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதினார்.  சில ஆண்டுகள் தமது சொந்த மாகாணத்தில் சட்டசபை அங்கத்தினராகவும் பணியாற்றினார்.

விட்டியர் சங்கீதத் திறமையில்லாதவராதலால், தமது செய்யுள்களை அவர் பாடல்களாகக் கருதவில்லை.  ஆனால் 1893ல் சிக்காகோ நகரில் நடந்த மதசம்பந்தமான மாநாட்டில் (Parliament of Religions) எல்லா மதத்தினரும் பாடுவதற்காகத் தொகுக்கப்பட்ட பாட்டுப் புத்தகத்தில், விட்டியர் எழுதிய அநேக செய்யுள்கள் பாடல்களாகச் சேர்க்கப்பட்டன.  இவற்றில், ‘கர்த்தாவே மாந்தர் தந்தையே’ என்னும் பாடலும் ஒன்று.

விட்டியர் 1802ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஹாம்ப்டன் பால்ஸ் என்னுமிடத்தில் தமது 85வது வயதில் மறுமைக்குட்பட்டார்.


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.    கர்த்தாவே மாந்தர் தந்தையே,
பேதையோர் பொறுப்பீர்;
சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே
பக்தோராய்ச் சேவை செய்துமே
பணிந்து போற்றிட

2.    நன்னாதர் அன்பின் அழைப்பை
தட்டாமல் நம்பியே
பன்னிரு சீஷர்தாம் உம்மை
பின்சென்றவண்ணம் நாங்களும்
பின்செல்லச் செய்வீரே.

3.    மா கலிலேயா ஓய்வினில்
அமைதி குன்றின்மேல்,
ஓயாதமைதி ஸ்தலத்தில்
ஆ இயேசு நாதா, ஜெபத்தில்
அன்பாக அமர்ந்தீர்.

4.    உம் சாந்த ஆவி ஊற்றிடும்
எம் உள்ள கோஷ்டத்தில்
உளம் வருத்தும் தொல்லையே
ஒழிந்திட, உம் சாந்தியே
உள் வாழ்க்கை ஊன்றிட.

5.    அலைக்கழிக்கும் ஆசையை
அடக்கும் ஆவியால்
மா காற்று கம்பம் அக்கினியில்
ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே
அடியார் கேட்கட்டும்.

Post Comment

Tuesday, May 27, 2025

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின் (Truro)

பாமாலை 135 - மகிழ் கர்த்தாவின்
Tune : Truro

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

*************

1.            மகிழ், கர்த்தாவின் மந்தையே
இதோ, கெம்பீரத்துடனே
பரத்துக்குள் அதிபதி
எழுந்து போனதால் துதி.

2.    விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி, மா வணக்கமாய்
பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு
ஆராதனை செலுத்திற்று.

3.    கர்த்தாதி கர்த்தர் நமக்கு
தலைவரானார் என்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம்.

4.    ஆ, இயேசு தெய்வ மைந்தனே,
கர்த்தா, பர்த்தா, முதல்வரே,
அடியார் நெஞ்சு உமக்கு
என்றும் ஆதீனம் ஆனது.

5.    விண்ணோரைப் போல் மண்ணோர்களே
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப் பாடுங்கள்,
அவரின் மேன்மை கூறுங்கள்.

Post Comment

Friday, April 18, 2025

பாமாலை 379 - என் ஆண்டவா இப்போரில் (Rockingham)

பாமாலை 379 - என் ஆண்டவா இப்போரில் 
Tune : Rockingham


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1. என் ஆண்டவா இப்போரில் நான்
விழாது உம் பிரசன்னத்தால்
நெருங்கி என்னைத் தாங்கிடும்
நேராய் நடத்தும் உம் அன்பால்

2. என் ஆவல் என்றும் உம்மிலே
என்றாலும் என்னை சூழ்ந்திடும்
பிசாசு மாம்சம் லோகத்தால்
மாளாது பெலன் தந்திடும்

3. ஐயோ நான் பலவீனனே
ஓயாது வீழ்ந்து சாகின்றேன்
என் இயேசுவே என் ஜீவனே
உன் பாதம் தஞ்சம் அண்டினோம்

4.  நற் போராட்டம் போராடிட
ஓட்டத்தை உம்மில் முடிக்க
விண் கிரீடம் பெற்று பாடிட
விடாது தாங்கி நடத்தும்


















Post Comment

Wednesday, March 19, 2025

பாமாலை 376 - பாவ சஞ்சலத்தை (Conqueror)

பாமாலை 376 - பாவ சஞ்சலத்தை 
Tune : Conqueror
What a Friend we Have in Jesus


இப் பாடலை இயற்றியவர் ஜோசப் ஸ்கிரீவன். 1819 ம் ஆண்டு அயர்லாந்தில் சீப்பாட்ரிக் என்னும் இடத்தில் பிறந்தார். திருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவருக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மணநாளுக்கு முன்தினம் மணப்பெண் குதிரையில் ஏறி ஒரு ஆற்றைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை ஆற்றின் மறுகரையில் நின்று பார்த்துக்கொண்டு உதவிச் செய்யக் கூடாமல் திகைத்து நின்ற ஸ்கிரீவன் மிகவும் வேதனைப்பட்டார். அதனால் அவர் மனநிலையும் பாதிக்கப்பட்டது. இத்துயரத்தை மறக்க 1845ல் தமது 25 ஆம் வயதில் கனடா சென்றார்.

ஆண்டுகள் உருண்டோடின. ஸ்கிரீவன் "பிளைமவுத் சகோதரர்" என்ற சீர்திருத்த சபையில் சேர்ந்தார். அச்சமயம் ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். மணநாளும் குறிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன் அந்த சபையில் சேர விரும்பிய அவளுக்கு ஒரு ஏரியில் ஞானஸ்நானம் கொடுத்தனர். தண்ணீர் மிகவும் குளிர்ந்திருந்ததால் ஜலதோஷம் பிடித்தது. அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல் வந்தது அவள் மரித்துப் போனாள்.

இத்திருமணத்தின் மூலமாவது தன் மகன் சந்தோஷ வாழ்வு பெறுவான் என்று நம்பியிருந்த ஸ்கிரீவனின் தாயார் தாங்கமுடியாத துயரத்துக்குள்ளானார். தனது வேதனையின் மத்தியிலும் தன்னை நினைத்து வருந்தும் தாயை ஆறுதல் படுத்த ஸ்கிரீவன் 1855ஆம் ஆண்டு இந்த அருமையான பாடலை எழுதினார்.

இப்பாடலுக்கு ஸ்கிரீவன்  கொடுத்த தலைப்பு "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" என்பதே. அவரை பராமரிக்க வந்த நண்பர் இப்பாடலின் கைப்பிரதியைப் பார்த்தார். அதைப்பார்த்து மனம் நெகிழ்ந்தவராக ஆச்சரியத்துடன் இப்பாடலை இயற்றியது யார்? என்று  கேட்டார்.  அதற்கு ஸ்கிரீவன் "நானும் ஆண்டவரும் சேர்ந்து இயற்றினோம்" என்று தாழ்மையாய் பதிலளித்தார்.

இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால் இயற்றப்பட்ட இப்பாடல் சாங்கியின் முதல் தர நற்செய்தி பாடல் தொகுப்பில் இடம்பெற்றது. உலகமெங்கும் பல உயிர்மீட்சி கூட்டங்களிலும், ஜெபக் கூட்டங்களிலும்  இன்றும் பாடப்பட்டு வருகின்றது. பாமர மக்களும் எளிதில் புரிந்துக்கொள்ளும் இப்பாடல் உலகிலுள்ள 4,00,000 கிறிஸ்தவ பாடல்களில் மிகவும் விரும்பி பாடப்படும் பாடல் என புகழப்பட்டது.

இப்பாடலுக்கு ‘Conqueror' எனும் இந்த ராகம் John S Wiseman என்பவரால் அமைக்கப்பட்டது.

ஸ்கிரீவன் தன் வாழ்வின் கடைசி நாட்களை சுகவீனம்,  வறுமை, மற்றும் மனவியாகுலத்துடன் கழித்தார். இறுதியில் 1886ம் ஆண்டு  தமது 66 வது வயதில் "நைஸ்லேக்" என்னும் ஊரில் ஒரு சிற்றாற்றில் தவறி விழுந்து மரித்தார்.

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1.            பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்.

2.    கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,
தீய குணம் மாற்றுவார்.

3.    பலவீனமானபோதும்
கிருபாசனம் உண்டே;
பந்து ஜனம் சாகும்போதும்
புகலிடம் இதுவே;
ஒப்பில்லாத பிராண நேசா!
உம்மை நம்பி நேசிப்போம்.
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

 

Post Comment

Thursday, February 20, 2025

நன்மைக்கே எல்லாமே (It is Well with My Soul)

நன்மைக்கே எல்லாமே (It is Well with My Soul)

வாழ்க்கை நம்மால் முன்கணிக்க முடியாததாக இருக்கலாம்! மகிழ்ச்சியும் - துக்கமும், அழகான ஆசீர்வாதங்களும் - துயரம் தரும் சிரமங்களும், எதிர்பாராத விதமாக வரலாம். நம் வாழ்க்கையின் கனவுகளும் திட்டங்களும் ஒரு நொடியில் மாறக்கூடும். இது உண்மை என்று நாம் அனைவரும் அறிவோம். அப்படியானால், இத்தகைய கொந்தளிப்பின் மத்தியில் நாம் எவ்வாறு அமைதியைக் கண்டறிவது? 

Horatio Gates Spafford

அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் ஹொரேஷியோ ஜி. ஸ்பாஃபோர்ட் (Horatio Gates  Spafford) என்ற வழக்கறிஞர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். தமது வழக்கறிஞர் தொழிலுடன், ரியல் எஸ்டேட் முதலீட்டுத் தொழிலிலும் ஹொரேஷியா ஈடுபட்டு வந்தார். 

அமைதியாகப் போய்க்கொண்டிருந்த ஹொரேஷியாவின் வாழ்வில் 1871ம் ஆண்டு ஒரு பெரும் துயரம் நேர்ந்தது.  அந்த ஆண்டில், சிகாகோவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் தன் செல்வத்தை இழந்தார். அதே நேரத்தில், அவரது நான்கு வயது மகன் ஸ்கார்லெட் காய்ச்சலால் மரித்துப்போனான்.

இந்த துயரச் சுமைகளிலிருந்து சற்று தள்ளியிருக்க எண்ணிய ஹொரேஷியா, தனது குடும்பத்துடன் எங்காவது சென்று வரலாம் என்று நினைத்து,  தனது மனைவியையும் நான்கு மகள்களையும் ஒரு கப்பலில் இங்கிலாந்துக்கு அனுப்பினார்.   முதலில் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, தவிர்க்க இயலாத சில முக்கிய வேலைகளை முடித்தபின்னர், தானும் கிளம்பி அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்பது அவர் திட்டம்.

இருப்பினும், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும்போது, ​​ஹொரேஷியாவின் குடும்பத்தினர் பயணித்த கப்பல், ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கிக் கடலில் மூழ்கியது.   ஹொராஷியோ ஸ்பாஃபோர்டின் நான்கு மகள்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் அவ்விபத்தில் தங்கள் உயிர்களை இழந்தனர்.  அவர் குடும்பத்தில் அவரது மனைவி அன்னா மட்டுமே, அந்த துயரத்திலிருந்து தப்பினார். 

மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட ​​ஹொரேஷியாவின் மனைவி இங்கிலாந்து வந்தவுடன், "Saved alone. What shall I do?" [நான் மட்டுமே தப்பிப்பிழைத்தேன்.  இப்போது என்ன செய்வது?] என்று தனது கணவருக்கு ஒரு தந்தி (Telegram) அனுப்பினாள்.  தந்தியைக் கண்டு ஹொரேஷியா மனமுடைந்துபோய், உடனடியாக  இங்கிலாந்துக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டு அடுத்த கப்பலிலேயே கிளம்பினார்.
 
அவரது பயணத்தின் வழியில், கடலில் விபத்து நடந்த இடத்தைக் கப்பல் கடந்தபோது, கப்பலின் கேப்டன் ​​ஹொரேஷியா குடும்பத்தின் துயரக்கதையை அறிந்திருந்ததால், ஹொராஷியோவை அழைத்து, "இந்த இடத்தில்தான் உங்கள் குடும்பத்தினர் பயணம் செய்த கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியது" என்று கூறினார். ஹொராஷியோ தனது மகள்களைப் பற்றி நினைத்து துயருற்றபோது, ஆண்டவருடைய நம்பிக்கையின் வார்த்தைகள் அவரது இதயத்தையும் மனதையும் நிரப்பின.  

அந்த வார்த்தைகள் ஒரு அன்பின் பாடலாக அந்த இடத்திலேயே உருவெடுத்தது.

"When peace like a river, attendeth my way,
When sorrows like sea billows roll—
Whatever my lot, thou hast taught me to know
It is well, it is well with my soul".

"துன்பங்கள் என்னை நெருங்கி வந்தாலும்
யேசுவில் நிம்மதி பெற்றேன்.
என்ன நேர்ந்தாலும், அவர் வாக்குப்படி
நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே"

என்று ஆண்டவர் தன்னோடு பேசிய விசுவாச வார்த்தைகளை பாடலாக எழுதி முடித்தார்.  

பின்னர் Philip Paul Bliss என்பவர் இவ்வரிகளுக்கான ராகத்தை அமைத்தார். 

ஒருவேளை நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நாம் எப்போதும் சொல்ல முடியாது. எப்போதும் புயல்கள் இருக்கும், சில சமயங்களில் துயரங்களும் இருக்கும். ஆனால் அன்பான கடவுள் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய தெய்வீக உதவியில் விசுவாசம் வைத்தால், நாமும் நம்பிக்கையுடன் கண்டிப்பாகப் பாடலாம் "நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே".

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Sheet Music in C Major



துன்பங்கள் என்னை நெருங்கி வந்தாலும்
யேசுவில் நிம்மதி பெற்றேன்.
என்ன நேர்ந்தாலும், அவர் வாக்குப்படி
நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே

நன்மைக்கே எல்லாமே
நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே

2. சாத்தான் என்னைச் சோதிக்க வந்த போதும்
உம் வார்த்தையால் வென்றிடுவேன்.
யேசு எனக்காய் சிந்திய ரத்தத்தால்
எனக்கு வெற்றியே வெற்றியே

3. என் பாவங்கள் சிவேரென்றி ருந்தாலும்
யேசுவின் திரு ரத்தத்தால்
பஞ்சைப் போல் மிக வெண்மை யாகிடுமே
தோத்திரம், தோத்திரம் யேசுவே.

4. மேகங்கள் சால்வை போல் உருண்டோடிடும்
எக்காளம் தொனித்திடவே
மீட்பர் என்னை அழைக்க வந்திடுவார்
நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே.




Post Comment

Wednesday, February 5, 2025

பாமாலை 72 - ராக்காலம் பெத்லேம் (Community Carol)

பாமாலை 72 - ராக்காலம் பெத்லேம் (Community Carol)
While Shepherds watch their flocks by night


SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

********


1.    ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்.

2.    அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன், ‘திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்’.

3.    ”தாவீதின் வம்சம் ஊரிலும்,
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்”.

4.    ”இதுங்கள் அடையாளமாம்,
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்”.

5.    என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதரோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.

6.    ”மா உன்னதத்தில், ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்”.

















Post Comment

Tuesday, February 4, 2025

பாமாலை 224 - நாதா ஜீவன் சுகம் (Requiem)

பாமாலை 224 - நாதா ஜீவன் சுகம் (Requiem)
Thou to Whom the sick and dying


SATB 

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

**********

1.    நாதா, ஜீவன் சுகம் தந்தீர்
நாடி வந்த மாந்தர்க்கு
இன்றும் ஜீவன் சுகம் ஈவீர்
நோயால் வாடுவோருக்கு,
நாதா, உம்மைப் பணிவோம்
பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

2.    ஆவலாய் சிகிச்சை நாடி
சாவோர் பிணியாளிகள்
வைத்தியர் சகாயர் தேடி
வருவாரே ஏழைகள்
நாதா, சுகம் அருள்வீர்,
பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர்.

3.    ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும்,
கையால் உள்ளத்தாலுமே
பாசம் அநுதாபத்தோடும்
பாரம் நீக்கச் செய்யுமே;
நாதா, ஜெபம் படைப்போம்,
பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

4.    பாவம் நோயும் சாவும் நீங்கும்
யாவும் செய் உம் தயவால்
பாடுற்றோராம் மாந்தர் யாரும்
பக்த கோடி ஆவதால்
நாதர் ஆசனம் முன்னாய்
பாதம் வீழ்வார் பக்தியாய்.




Post Comment

Thursday, April 4, 2024

பாமாலை 122 - அல்லேலூயா ஆ மாந்தரே (Arrangement-2)

 பாமாலை 122 – அல்லேலூயா! ஆ மாந்தரே

(Alleluya! O Sons and Daugh­ters, Let Us Sing!)
Tune: O FILII ET FILIAE

‘அல்லேலூயா! ஆ மாந்தரே’ எனும் இப்பாடல், கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று, நம் திருச்சபைகளில் மிக அரிதாகவே இப்பாடல் பாடப்படுகிறது. இப்பாடலை எழுதியவர் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த Jean Tisserand எனும் ஃப்ரெஞ்சு நாட்டின் துறவி என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.


John Mason Neale

ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர். அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர். ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார். திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது. அவர் ஒரு சிறந்த கல்விமான். ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார். திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார். மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார். அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

*********************

1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!

2. அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.

3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
நாதர் கலிலேயா செல்வார்.

4. பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம், தாசரே!

5. உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.

6. வா, தோமா, என் விலாவைப் பார்,
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.

7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

8. காணாமல் நம்பின் பாக்கியர்;
மாறா விஸ்வாசம் வைப்பவர்
மா நித்திய ஜீவன் பெறுவர்.

9. மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
பரனைப் போற்றி மகிழ்வோம்.
அல்லேலூயா!





Post Comment

Sunday, March 24, 2024

பாமாலை 377 - பிதாவே பலன் ஈந்திடும்

பாமாலை 377 - பிதாவே பலன் ஈந்திடும்
My God My Father while I Stray


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

Sheet Music in G Major






1. பிதாவே பலம் ஈந்திடும்
என் வாழ்க்கை கஷ்டமாயினும்
மெய் ஊற்றத்தோடு பாடவும்
உம் சித்தமே

2. என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்
எச்சக்தி சார்பு சாயினும்
உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்
உம் சித்தமே

3. பணிவாய் உம்மைப் பற்றுவேன்
சதாவாய் சேவை ஆற்றுவேன்
எவ்வேலை தன்னில் சாற்றுவேன்
உம் சித்தமே

4.நீர் ஏவி பாதுகாத்திட
உம் ஞானம் பாதை காட்டிட
கூடும் எச்செய்கை ஆற்றிட
உம் சித்தமே

5.நான் அல்ல நீர்தாம் என்றுமே
உம் சர்வ சக்தி என்னிலே
உம் ஆணை ஆஞ்ஞை எனக்கே
உம் சித்தமே

6. என் ஆயுள் மகிழ் பொங்கிடும்
சா நோவு பாவம் ஓய்ந்திடும்
விஸ்வாசம் அன்பு வென்றிடும்
உம் சித்தமே



Post Comment

Monday, February 26, 2024

பாமாலை 188 - உம்மாலேதான் என் இயேசுவே (Caithness)

பாமாலை 188 - உம்மாலேதான் என் இயேசுவே 
Tune : Caithness


SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.         உம்மாலேதான் என் இயேசுவே
ரட்சிக்கப்படுவேன்
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து களிப்பேன்
 
2.         இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்
 
3.         இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்
இக்கட்டு வரும்பொழுது
நீர் என்னைத் தேற்றுவீர்
 
4.         பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்






Post Comment

Thursday, February 1, 2024

பாமாலை 380 - கர்த்தரை என்றுமே (Monks Gate)

பாமாலை 380 - கர்த்தரை என்றுமே
He who would valiant be
Tune : Monks Gate 


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. கர்த்தரை என்றுமே
பின்செல்லும் சீஷன்
எத்தோல்வி தீங்குமே
மேற்கொள்ளும் வீரன்
எப்பயமின்றியே
தான் கொண்ட எண்ணமே
விடானே என்றுமே
மோட்சம் செல்லுவோன்

2. திகில் உண்டாக்குவார்
கோர கதையால்
தாமே தத்தளிப்பார்
வீரன் ஊற்றத்தால்
மாற்றாரை மடக்கி
ராட்சதர் அடக்கி
காட்டிடுவான் சக்தி
மோட்சம் செல்லுவோன்

3. கர்த்தா நீர் காத்திட
தூய ஆவியால்
பெறுவேன் நித்திய
ஜீவன் முடிவில்
வீண் எண்ணம் ஓடிடும்
வீண் பயம் நீங்கிடும்
முயற்சிப்பேன் என்றும்
மோட்சம் செல்லுவேன்


















Post Comment

Tuesday, January 30, 2024

பாமாலை 382 - துக்கம் திகில் இருள் சூழ (Marching)

பாமாலை 382 - துக்கம் திகில் இருள் சூழ 
Through the night of doubt and sorrow
Tune : Marching


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. துக்கம் திகில் இருள் சூழ
மோட்ச யாத்ரை செய்கிறோம்
கீதம் பாடி முன்னே நோக்கி
மோட்ச பாதை செல்கிறோம்

2.  இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும்
தீப ஸ்தம்ப ஜோதியும்
வீரமாக ஐக்யமாக
முன்னே செல்வோம் ராவிலும்

3. பக்தரோடு தங்கிச் செல்லும்
தெய்வமாம் ஒளி ஒன்றே
இருள் நீங்க அச்சம் நீங்கும்
பாதை முற்றும் பகலே

4. எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே
குன்றா விசுவாசமும்
எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே
ஒன்றே எம் நம்பிக்கையும்

5. மோட்சம் செல்லும் கோடிப்பேரும்
பாடும் பாட்டு ஒன்றேயாம்
ஆபத்து போராட்டம், தெய்வ
பாதை செல்வதும் ஒன்றாம்

6. மோட்ச கரை சேர்ந்த பின்னும்
பூரிப்பானந்தம் ஒன்றே
ஒரே சர்வ வல்ல பிதா
அன்பால் அரசாள்வாரே

7. முன்னே செல்வீர், தோழரே நீர்
சிலுவை உம் பலமாம்
நிந்தை தாங்கிப் போர்புரிவீர்
ஆயுள் காலமும் எல்லாம்

8. நியாயத் தீர்ப்பு மா தினத்தில்
கல்லறை விட்டெழுவோம்
துக்கம் திகில் யாவும் நீங்கும்
பாடும் ராவும் ஓய்ந்துபோம்






















Post Comment

Monday, January 29, 2024

பாமாலை 383 - தெய்வ கிருபையைத் தேட (St. Oswald)

பாமாலை 383 - தெய்வ கிருபையைத் தேட 
Tune : St. Oswald


SATB

SATB with Descant

Descant

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1. தெய்வ கிருபையைத் தேட
நீ போராடிக் கொண்டிரு
ஆவி பாரமின்றி ஏற
நன்றாய் ஜாக்கிரதைப்படு

2. வாசல் மிகவும் இடுக்கம்
தாழ்மையாகி உட்படு
ஜீவ வழியோ நெருக்கம்
லோக நேசத்தை விடு

3. சேவகத்தில் பின் வங்காமல்
ராஜ்ஜியத்துக்குட்படு
பேய் எதிர்த்தால் தளராமல்
நின்று ஏகிக்கொண்டிரு

4. வேண்டுதலினால் போராடி
ஆண்டவரின் தயவு
காணுமட்டுக்கும் மன்றாடி
கூப்பிட்டுக்கொண்டேயிரு

5. கர்த்தர் உன்னைத் தயவோடே
ஏற்றுக்கொண்டபிறகு
பாவம் உன்னிலே வேரோடே
செத்ததென்றெண்ணாதிரு

6. ஜீவனுள்ள நாள்மட்டாக
மோசங்கள் இருக்குமே
திகிலும் பயமுமாக
உன் ரட்சிப்பைக் காப்பாயே

7. நீ முடிவைப் பெற்றிருந்தால்
கெட்டியாய்ப் பிடித்திரு
பின்னடைந்து போய்விழுந்தால்
மோசம் மா பெரியது

9. மாய்கையை நோக்காதே விட்டு
ஞான ஆயுதங்களை
ராவும் பகலும் பிடித்து
நிர்விசாரத்தைப் பகை

















Post Comment

Tuesday, January 23, 2024

பாமாலை 389 - தூதாக்கள் விண்ணில்

பாமாலை 389 - தூதாக்கள் விண்ணில் 
Nun danket all und bringet

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.  தூதாக்கள் விண்ணில் பாடிய
தயாபரருக்கே
துதி செலுத்து சகல
நரரின் கூட்டமே

2.  ”மா செய்கைகளைச் செய்கிற
பராபரனைப் போல்
ஆர்” என்றவரை உத்தம
கருத்தாய்ப் போற்றுங்கள்

3.  இந்நாள்வரைக்கும் நமக்கு
சுகம் அருளினார்
நீங்கா இக்கட்டைத் தமது
கரத்தால் நீக்கினார்

4.  நாம் செய்திருக்கும் பாவத்தை
பாராதிருக்கிறார்
தெய்வீக ஆக்கினைகளை 
அன்பாய் அகற்றினார்

5.  இனியும் நாம் மகிழ்ச்சியாய்
இருக்க சகல
தீங்கையும் அவர் தயவாய்
விலக்கியருள

6.  புவியில் சமாதானத்தை
அவர் தந்தென்றைக்கும்
அன்பாய் நாம் செய்யும் வேலையை
ஆசீர்வதிக்கவும்

7.  நம்மோடே அவர் தயவாய்
இருந்து துக்கமும்
வியாகுலமும் தூரமாய்
விலகப் பண்ணவும்

8.  நாம் சாகுமட்டுக்கும் கர்த்தர்
நாம் தங்கும் கோட்டையும்
நாம் சாகும்போது நம்முட
கதியுமாகவும்

9.  பிரிந்து போகும் ஆவியை
மோட்சானந்தத்திலே
அவர் சேர்த்ததைத் தம்மண்டை
மகிழ்ச்சியாகவே

Post Comment