Wednesday, January 22, 2014

பாமாலை 92 - ஓசன்னா பாலர் (St. Theodulph)

பாமாலை 92 – ஓசன்னா பாலர் பாடும்
All glory, laud and honour

’முன் நடப்பாரும் பின் நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்; தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா’ என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். மத் 21:9

கிறிஸ்துநாதர் பாடுபடுவதற்கு முன்னே அவர் ஒரு கழுதைக்குட்டியின்மேல் சவாரி செய்து, அரச மரியாதைகளுடன் மகத்துவமாக எருசலேம் நகரத்துக்குள் சென்றார்.  அவ்வூர்வலத்தில் அவரது சீடரும், ஏராளமான யூதரும், பிள்ளைகளும் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு ஓசன்னா பாடிச்சென்றனர்.  இப்பவனியின் ஞாபகார்த்தமாக, உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முந்தின ஓய்வுநாளை, ‘குருத்தோலை ஞாயிறு’ எனும் பெயருடன் திருச்சபை ஆசரித்து வருகிறது.  சுமார் ஆயிரத்து நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு குருத்தோலை ஞாயிறன்று, முதல்முதலாகப் பாடப்பட்ட ஒரு பாடலே, ‘ஓசன்னா பாலர் பாடும்’ என்னும் பாடலாகும்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இத்தாலி நாட்டில் தியோடல்ப் (Theodulph) எனும் ஒரு வாலிபன் இருந்தார்.  அவர் இளவயதிலேயே துறவிகள் மடத்தில் சேர்ந்து, சிறந்த பணியாற்றி வந்தார்.  நல்ல கல்வியறிவும், மடத்தை நல்லமுறையில் நடத்தும் திறமையும் உடையவராதலால் வெகுசீக்கிரத்தில் அவர் மடத்தின் தலைவரானார்.  அக்காலத்தில் மடங்களிலும், திருச்சபையிலும் குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் உண்டாவது வழக்கமாய் இருந்தது.  பக்தன் தியோடல்ப் இக்குழப்பங்களைத் திறமையுடன் சமாளித்து, மடத்தைச் சுற்றியுள்ள மக்களைச் சமாதானமாக வாழச்செய்தார். இவரது சிறந்த அறிவையும், பக்தியையும், திறமையையும் கேள்வியுற்ற பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தியான சார்லிமாக்னே (Emperor Charlemagne) என்பவர் தியோடல்பை ஆர்லியன்ஸ் நகரத்தின் அத்தியட்சராக நியமித்தார்.

மத்திய காலத்தில் (Middle ages) மத குருக்களிடம் மட்டுமே கல்வியறிவு பெருகியிருந்தது.  பொதுமக்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர். ஆதலின், அரசியல் விஷயங்களில் மத குருக்களும், தலைவர்களும் அதிகமாகத் தலையிடும் வாய்ப்பு இருந்தது. தியோடல்பை ஆதரித்த சார்லி மாக்னே மன்னன் இறந்தபின், அவரது புதல்வரான லூயி அரசன் (Louis the Pious) ஆட்சி புரிந்தார்.  ஆட்சியில் அவருக்குப் பல தொந்தரவுகள் நேரிட்டன.  தியோடல்ப் அத்தியட்சரிடம் பொறாமை கொண்ட பலர் அரசனிடம் சென்று, அவர் ராஜதுரோகியென்றும், அவராலேதான் அரசனுக்குத் தொந்தரவுகள் உண்டாயின என்றும் பொய்ப்புகார் செய்தனர்.  அரசன் கோபமூண்டு, தியோடல்பை ஆங்கர்ஸ் நகரத்தில் சிறையிலடைத்தார்.  அவர் மூன்று ஆண்டுகள் சிறையில் அவதிப்பட்டார்.  இந்த நேரத்தை அவர் வேத ஆராய்ச்சியிலும், பாடல்கள் எழுதுவதிலும் செலவிட்டார்.

கி.பி. 821ம் ஆண்டு, குருத்தோலை ஞாயிறன்று, லூயி அரசன் ஆங்கர்ஸ் நகரத்துக்கு வந்திருந்தார். வழக்கம்போல அரசன் தன் பரிவாரங்களோடும், மத குருக்களோடும் காலையில் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு ஆலயத்துக்குப் பவனி சென்றார்.  தியோடல்ப் அடைபட்டிருந்த சிறை வழியாகப் பவனி செல்லும்போது, இத்தினத்திற்காக ஏற்கெனவே அத்தியட்சர் எழுதி வைத்திருந்த, ‘ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே’ என்ற பாடலை சிறைக்கம்பிகளுக்குள் நின்று உரத்த சத்தமாய்ப் பாடினார்.  இதைக்கேட்ட அரசனும் பரிவாரங்களும் அமைதியாகப் பாட்டு முடியும்வரை நின்றனர்.  பாட்டு முடிந்தவுடன் அரசன், ‘இப்பாடலை எழுதிய அத்தியட்சர் ராஜ துரோகியல்ல, இவரை விடுதலை செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டு, அவரை முன்போல ஆர்லியன்ஸ் நகரத்தின் அத்தியட்சராக நியமித்தார். மேலும், ஒவ்வொரு குருத்தோலை ஞாயிறன்றும் இப்பாடல் அந்நாட்டின் ஆலயங்களிலெல்லாம் பாடப்படவேண்டுமென்றும் கட்டளையிட்டார்.

John Mason Neale
இப்பாடல் முதலில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது. 1842ல் ஜான் மேசன் நீல் (John Mason Neale) என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் தமிழ் உட்பட ஏராளமான பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகமெங்கும் குருத்தோலை ஞாயிறன்று பாடப்பட்டு வருகிறது.  இப்பாடலுக்கு நாம் பாடும் ராகம் முதலில் தியோடல்ப் அத்தியட்சர் பாடிய ராகமல்ல.  நாம் பாடும் ராகமானது டெஷ்னர் (Melchior Teschner) என்பவரால் எழுதப்பட்டு, அத்தியட்சர் ஞாபகார்த்தமாக ‘St. Theodulph’ என அழைக்கப்படுகிறது.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


ஓசன்னா பாலர் பாடும்
ராஜாவாம் மீட்பர்க்கே
மகிமை புகழ் கீர்த்தி
எல்லாம் உண்டாகவே

1.            கர்த்தாவின் நாமத்தாலே
வருங் கோமானே நீர்
தாவீதின் ராஜ மைந்தன்
துதிக்கப்படுவீர்.

2.    உன்னத தூதர் சேனை
விண்ணில் புகழுவார்
மாந்தர் படைப்பு யாவும்
இசைந்து போற்றுவார்.

3.    உம்முன்னே குருத்தோலை
கொண்டேகினார் போலும்
மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்
கொண்டும்மைச் சேவிப்போம்.

4.    நீர் பாடுபடுமுன்னே
பாடினார் யூதரும்
உயர்த்தப்பட்ட உம்மை
துதிப்போம் நாங்களும்.

5.    அப்பாட்டைக் கேட்டவண்ணம்
எம் வேண்டல் கேளுமே
நீர் நன்மையால் நிறைந்த
காருணிய வேந்தரே.

All Glory Laud and Honour

Post Comment

No comments:

Post a Comment