Tuesday, February 17, 2015

பாமாலை 40 - மெய் ஜோதியாம் நல்

பாமாலை 40 – மெய்ஜோதியாம் நல் மீட்பரே
(Sun of my soul, Thou Saviour dear)

நமதாண்டவர் உயிர்த்தெழுந்தபின், இரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் கிராமத்துக்குச் செல்லும்போது, இயேசுவும் அவர்களுடனே கூடச் சேர்ந்து நடந்து போனார்.  கிராமத்தைச் சமீபித்தபோது, அவர்கள், ‘நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று’ (லூக்கா 24:29) என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்பாடல் எழுதப்பட்டது.  தனிமையாகச் செல்லும் ஒரு பிரயாணி, சூரியன் அஸ்தமித்தபின், இருளில் செல்லும்போது, கடவுள்பேரில் நம்பிக்கைவைத்து, தனக்குத் தேவையான பாதுகாப்பையும், ஒளியையும் அவரே அளிப்பார் என்னும் விசுவாசத்தில் செல்லுவதை இப்பாடல் குறிக்கிறது. மெய்ஜோதியான நம் மீட்பர் நம்மோடு தங்கினால், பயத்தை உண்டுபண்ணும் இரவு போன்ற நிலைமைகள் நமக்கு இல்லை என்பது, இப்பாடலின் மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.

John Keble
(Source Credits : Wikipedia)
இப்பாடலை எழுதிய ஜான் கெபிள் போதகர் (John Keble) ஆங்கிலச் சபையைச் சேர்ந்தவர்.  இவர் இங்கிலாந்தில் க்ளஸ்டர்ஷயர் (Gloucestershire) மாகாணத்தில், பேர்பீல்டு என்னுமிடத்தில் 1792ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி பிறந்தார்.  அவரது தந்தையும் ஓர் ஆங்கிலச் சபையில் குருவாகப் பணியாற்றி வந்தவர்.  இளவயதில் அவரது தந்தையே அவருக்குக் கல்வி கற்பித்தார்.  பதினைந்தாம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், கார்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரியில் (Corpus Christi College, Oxford) சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஆங்கிலம், லத்தீன் மொழிகளில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.  தமது பதினெட்டாம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு ஓரியல் கல்லூரியில் முதல் மாணவனாக (Fellow of Oriel College) தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சிறந்த கவித்திறமையுள்ளவராதலால், அவர் பத்து ஆண்டுகள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.  1815ல் குருத்துவப் பட்டம் பெற்று, தன் ஆயுள் முழுவதும் வின்செஸ்டர் (Winchester) நகருக்கருகிலிலுள்ள ஹர்ஸ்லி (Hursley) என்னும் ஒரு சிறிய கிராமச் சபையில் போதகராகப் பணியாற்றினார்.

அவர் கல்லூரியில் மாணவராக இருக்கும்போதே சிறந்த கவிஞராக விளங்கினார். போதகரானபின் குருத்துவப் பணியுடன், பல கட்டுரைகள், கிறிஸ்தவக் கவிகள், அருளுரைகள் முதலியன எழுதிவந்தார்.  அவரது மிகச்சிறந்த கிறிஸ்தவப் பணி, அவர் இயற்றிய ஒரு பாட்டுப்புத்தகமாகும்.  அவர் புகழை விரும்பாதவராதலால், தமது பெயரால் அந்தப் புத்தகத்தை அச்சிடாமல், “கிறிஸ்தவ ஆண்டு” (Christian Year) என்னும் தலைப்புடன் வெளியிட்டார்.  நாற்பது ஆண்டுகளுக்குள், இப்புத்தகத்தின் மூன்று லட்சம் பிரதிகள் விலையாகின.  ‘மெய் ஜோதியாம் நல் மீட்பரே’ என்னும் பாடலும் முதல்முறையாக இப்புத்தகத்தில்தான் வெளியானது.  இப்பாடலுக்கு உபயோகப்படும் ராகம், அவர் ஊழியம் செய்த கிராமத்தின் ஞாபகார்த்தமாக “Hursley” என்றழைக்கப்படுகிறது.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை,

‘நாம் நித்திரை செய்து விழித்தோம்’ – பாமாலை 32
‘ஏதேனில் ஆதிமணம்’ – பாமாலை 216

‘கிறிஸ்தவ ஆண்டு” என்னும் இப்புத்தகத்தை விற்றதில் கிடைத்த வருமானத்தை ஆலயங்கள் கட்டுவதற்கும், ஹர்ஸ்லி ஊரிலுள்ள ஆலயத்தைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தினார்.

ஜான்கெபிள் போதகர் 1866ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி போர்ன்மத் என்னும் ஊரில் காலமானார்.  மூன்று ஆண்டுகளுக்குப்பின், அவர் ஞாபகார்த்தமாக ஆக்ஸ்ஃபோர்டு நகரில் கெபிள் கல்லூரி (Keble College, Oxford) நிறுவப்பட்டது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    மெய்ஜோதியாம் நல் மீட்பரே
நீர் தங்கினால் ராவில்லையே
என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
மேகம் வராமல் காத்திடும்.

2.    என்றைக்கும் மீட்பர் மார்பிலே
நான் சாய்வது பேரின்பமே
என்றாவலாய் நான் ராவிலும்
சிந்தித்துத் தூங்க அருளும்.

3.    என்னோடு தங்கும் பகலில்
சுகியேன் நீர் இராவிடில்
என்னோடே தங்கும் ராவிலும்
உம்மாலே அஞ்சேன் சாவிலும்.

4.    இன்றைக்குத் திவ்விய அழைப்பை
அசட்டை செய்த பாவியை
தள்ளாமல், வல்ல மீட்பரே
உம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே

5.    வியாதியஸ்தர், வறியோர்
ஆதரவற்ற சிறியோர்
புலம்புவோர் அல்லாரையும்
அன்பாய் விசாரித்தருளும்

6.    பேரன்பின் சாகரத்திலும்
நான் மூழ்கி வாழுமளவும்,
என் ஆயுள்காலம் முழுதும்
உம் அருள் தந்து காத்திடும்.

Sun of my Soul

Post Comment

No comments:

Post a Comment