Thursday, February 19, 2015

பாமாலை 41 - வியாதியஸ்தர் மாலையில்

பாமாலை 41 – வியாதியஸ்தர் மாலையில்
(At even ere the sun was set)

’சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்’. மாற்கு 1:32

Rev. Canon Henry Twells
லண்டன் மாநகரின் பெரும் கல்விச்சாலை ஒன்றின் தலைமை ஆசிரியராயிருந்த கனோன் ட்வெல்ஸ் (Rev. Canon Henry Twells) என்பவர் ஒருநாள் பள்ளி மாணவருக்குப் பரீட்சை நடத்திக்கொண்டிருந்தார்.  மாணவர்கள் வரிசையாக ஆசனங்களில் அமர்ந்து அமைதியாக எழுதிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் ஒருமுறை அறையைச்சுற்றி மேற்பார்வை இட்டபின், தமது ஆசனத்தில் அமர்ந்தார்.  தலைமையாசிரியராக இருந்தபடியால் அவருக்கு எப்போதும் அதிக வேலையிருந்தது.  ஆனால் இப்போது பரீட்சை அறையில் வேறு வேலை செய்ய இயலாமையால், பல நிறக் கண்ணாடிகள் பதித்திருந்த ஒரு ஜன்னல் வழியாக வெளியிலிருந்த இயற்கைக் காட்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்.  மாலைநேரம் நெருங்கும்போது, சூரிய ஒளியையும், செவ்வானத்தில் மேகங்களில் காணப்பட்ட பலவித வர்ணங்களையும் கண்டுகளித்தார்.  சூரியன் அஸ்தமிக்கும் நேரம் சமீபித்தபோது, அன்று காலையில் அவர் வேதத்தில் வாசித்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.  இதைப் போலொத்த ஒரு மாலை வேளையில் (மாற்கு 1:32) வியாதியஸ்தர் ஆண்டவரிடம் கொண்டுவரப்பட்டு குணமாக்கப்பட்டதை நினைத்தார்.

     இதை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில் தமது நண்பரான ஸர். ஹென்றி பேக்கர் சில தினங்களுக்குமுன் அவரிடத்தில் செய்த ஒரு வேண்டுகோள் ஞாபகத்துக்கு வந்தது.  ஆங்கிலச் சபைகளில் உபயோகப்பட்டுவரும், ‘Hymns Ancient and Modern’ என்னும் பாட்டுப்புத்தகம் அப்போது புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.  இதைப் புதுப்பிக்கும் குழுவில் ஸர் ஹென்றி பேக்கரும் ஒருவர். இவர் தமது நண்பரான கனோன் ட்வெல்ஸை சில பாடல்கள் எழுதித்தரும்படி கேட்டிருந்தார்.  இவ்வேண்டுகோள் ஞாபகத்துக்கு வரவே, அவர் மாலை வேளையில் வியாதியஸ்தர் ஆண்டவரிடம் கொண்டுவரப்பட்ட சம்பவத்தை வைத்து, ‘வியாதியஸ்தர் மாலையில்’ என்னும் பாடலையும் எழுதி முடித்தார்.  இப்பாடலுக்கு சங்கீத நிபுணரான ஜியார்ஜ் ஜோசப் அமைத்த, ‘Angelus’ என்னும் ராகம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

     ஆங்கிலத்தில் இப்பாடலின் முதல் வரியான, ‘At even ere the sun was set’ என்பதைக் குறித்து பிற்காலத்தில் அபிப்பிராய பேதங்கள் உண்டாயின. ‘ere the sun was set’ என்பது, ‘சூரியன் அஸ்தமிக்குமுன்’ எனப்பொருள்படும்.  ஆனால் வேதப்பகுதி (மாற்கு 1:32, லூக்கா 4:40) ‘சூரியன் அஸ்தமித்தபோது’ என்றிருக்கிறது. இச்சம்பவம் ஓய்வுநாள் மாலையில் நடந்தது.  ஓய்வுநாள் மாலையில் சூரியன் அஸ்தமித்தபின்னரே யூதர் வேலை செய்வார்கள்.  ஆகையால் சில பாட்டுப்புத்தகங்களில், ‘When the sun was set’ எனத் திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்மொழிபெயர்ப்பில், ‘மாலையில்’ என்றிருக்கிறது.

     இப்பாடலை எழுதிய கனோன் ஹென்றி ட்வெல்ஸ் என்பவர் 1825ம் ஆண்டு பிறந்தார். சிறந்த கல்லூரிப் பயிற்சிக்குப் பின், அவர் 1856 முதல் பதினான்கு ஆண்டுகள் லண்டன் மாநகரிலுள்ள புகழ்பெற்ற, ‘கோடோல்பின் ஹாமர்ஸ்மித்’ உயர்நிலைப்பள்ளியின் (Godolphin School, Hammersmith, London) தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.  அச்சமயத்தில்தான், 1868ல் இப்பாடலை எழுதினார்.  அவர் வேறு அநேக பாடல்கள் எழுதியபோதிலும், இந்த ஒரே பாடல் வாயிலாகவே நினைவுகூரப்படுகிறார்.  பின்னர் பீட்டர்பரோ பேராலயத்தின் பிரதமகுருவாகச் (Honorary Canon of Peterborough Cathedral) சிலகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றார்.  அவர் 1900ம் ஆண்டு தமது 77ம் வயதில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            வியாதியஸ்தர் மாலையில்
அவஸ்தையோடு வந்தனர்;
தயாபரா, உம்மண்டையில்
சர்வாங்க சுகம் பெற்றனர்.

2.            பற்பல துன்பம் உள்ளோராய்
இப்போதும் பாதம் அண்டினோம்
பிரசன்னமாகித் தயவாய்
கண்ணோக்குவீரென்றறிவோம்

3.            விசாரம் சஞ்சலத்தினால்
அநேகர் கிலேசப்பட்டனர்;
மெய்பக்தி அன்பின் குறைவால்
அநேகர் சோர்வடைந்தனர்.

4.            உலகம் வீண் என்றறிந்தும்
பற்றாசை பலர் கொண்டாரே;
உற்றாரால் பலர் நொந்தாலும்,
மெய்நேசர் உம்மைத்தேடாரே.

5.            மாசற்ற தூய தன்மையை
பூரணமாய்ப் பெறாமையால்,
எல்லோரும் சால துக்கத்தை
அடைந்தோம் பாவப் பாசத்தால்.

6.            , கிறிஸ்துவே, மன்னுருவாய்
மா துன்பம் நீரும் அடைந்தீர்;
எப்பாடும் பாவமும் அன்பாய்
ஆராய்ந்து பார்த்து அறிவீர்.

7.            உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;
நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே,
ஆரோக்கியம் எல்லாருக்கும்
இம்மாலை தாரும், இயேசுவே.

Post Comment

No comments:

Post a Comment