Monday, June 12, 2017

பாமாலை 234 - ஒழிந்ததே இப்பூவினில்

பாமாலை 234 – ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம்
(In Christ there is no East or West)

’கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்’. லூக் 13 : 29

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உலக ரட்சகராகப் பிதாவினாலே அனுப்பப்பட்டார். உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் அவர் ரட்சகர் என்பதைத் திருமறையில் பல இடங்களில் காண்கிறோம் (மாற் 16:15, யோவா 1:20, 3:17, 8:12, 12:47).  ஆயினும், ஆதித்திருச்சபையில் ரட்சிப்பு யூதருக்கு மட்டுமே உரியது என்னும் அபிப்பிராயம் பரவ ஆரம்பித்தது; ஏனெனில் அப்போஸ்தலர் எல்லாரும் யூதராகவே இருந்தனர்.  ஆனால் புறஜாதியாரும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.  விருத்தசேதனம் இல்லாத புறஜாதியாரைத் திருச்சபையில் ஏற்றுக்கொள்ளக்கூடாது என சிலர் விவாதித்தனர் (அப் 15:1). பவுலோ, நற்செய்தி எல்லா ஜனத்துக்கும் உரியது என வற்புறுத்தினர்.  இதைக்குறித்துத் தீர்மானிக்க, கி.பி. 49ல் எருசலேம் நகரில் ஓர் ஆலோசனைச் சங்கம் கூடிற்று.  இதில் ‘மிகுந்த தர்க்கம்’ உண்டானது (அப் 15:7).  இறுதியில், விருத்தசேதனமும், மோசேயின் நியாயப்பிரமாணமும் இரட்சிப்புக்கு அவசியமானதல்ல என்றும், சகல ஜாதியாரும் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.  அதன்பின்பு நற்செய்தி தீவிரமாகப் பரவ ஆரம்பித்து, உலகம் எங்கும் திருச்சபை வியாபித்திருக்கிறது.  ஆண்டவரும் அவரது உபதேசத்தில், உலகத்தின் நாலா திசைகளிலிருந்தும் ஜனங்கள் வந்து தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள் என்று கூறியுள்ளார் (மத் 8:11, லூக் 13:29). பவுல் அப்போஸ்தலன் இதைத் தமது நிருபங்களில் விரிவாக எடுத்துரைத்துள்ளார் (ரோமர் 10:12, கலாத் 3:18, கொலோ 3:11).

1908ம் ஆண்டு லண்டன் மாநகரில் மாபெரும் பொருட்காட்சி (Exhibition) ஒன்று நடத்தப்பட்டது.  இது உலகத்தின் நாலாபாகங்களிலும் நடந்துவரும் மிஷனரி ஊழியத்தின் சாதனைகளைக் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.  இதில் உலகத்தின் பற்பல பாகங்களிலிருந்து வந்த மிஷன் ஊழியர்கள் பங்கெடுத்தனர்.  இப்பொருட்காட்சியைத் திறந்துவைத்தவர் அக்காலத்தில் ஆங்கில அரசாங்கத்தின் வர்த்தக இலாகாவின் (Board of Trade) அதிபராயிருந்த வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர்.  பொருட்காட்சியின் முடிவில், ‘இருளும் ஒளியும்” (“Darkness and Light”) என்னும் பெயர்கொண்ட ஒரு காட்சி (Pageant) நடைபெற்றது.  இதில் பாடல்களும், சொற்பொழிவுகளும், நடிப்புகளும் இடம்பெற்றன. இதை அமைத்தவர் ஜான் ஆக்ஸன்ஹம் (John Oxenham) என்னும் எழுத்தாளர்.  பாடல்களை அமைத்தவர் ஹாமிஷ் மாக்கன் என்பவர்.  காட்சியைத் தயாரிக்கும்போது ஒரு பாடல் குறைவுபட்டதால், அதற்கேற்ற ஒரு பாடல் எழுதித் தரும்படி மாக்கன் தனது நண்பரான ஆக்ஸன் ஹமிடம் (John Oxenham) கேட்கவே, அவர் மிக விரைவில், ‘ஒழிந்ததே இப்பூவினில்’ என்னும் பாடலை எழுதிக்கொடுத்தார்.  அதற்கேற்ற ஓர் ராகத்தில் முதல்முதலாக இப்பாடல் அவ்விழாவில் பாடப்பட்டது.  விழாவிற்கு மிகவும் பொருத்தமான பாடலாக இருந்ததால், அது எல்லோராலும் பாராட்டப்பட்டது.

John Oxenham
இப்பாடலை எழுதிய ஜான் ஆக்ஸன் ஹம் என்பவர் 1852ம் ஆண்டு, நவம்பர் மாதம் 12ம் தேதி இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பிறந்தார்.  அவரது உண்மையான பெயர், வில்லியம் ஆர்தர் டங்கர்லே (William Arthur Dunkerley) என்பது.  சிறுவனாக இருக்கும்போது அவர் படித்த, ‘Westward Ho’ என்னும் கதைப்புத்தகத்திலிருந்த ஒரு பெயரைத்தான் பெயராக வைத்துக்கொண்டார் (Pen Name).  அவர் மான்செஸ்டர் நகரிலுள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.  அவரது தந்தை இங்கிலாந்திலும், பிரான்ஸ் நாட்டிலும் உணவுப்பொருள் வியாபாரம் நடத்தி வந்தார். பிரான்ஸ் நாட்டிலுள்ள வியாபாரப் பகுதியைக் கவனிப்பதற்காக ஆக்ஸன்ஹம் அனுப்பப்பட்டார்.  1877ல் அவர் அமெரிக்காவில் சுற்றுப்பிரயாணம் செய்து, இரண்டு ஆண்டுகளுக்குப்பின் லண்டன் நகருக்குத் திரும்பினார்.  இங்கு ஒரு புத்தகப் பதிப்பாளராகவும், எழுத்தாளராகவும், வேலை ஆரம்பித்து, 1913வரை இத்தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்பு ஈமிங் நகருக்குச் சென்று கிறிஸ்தவப் புத்தகங்களும் செய்யுள்களும் எழுதலானார். மொத்தத்தில் அவர் 62 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

ஜான் ஆக்ஸன்ஹம் 1941ம் ஆண்டு, ஜனவரி மாதம் 24ம் தேதி தமது 89ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்;
செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்,
சபை ஒன்றே ஒன்றாம்.

2.    மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே,
செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே.

3.    வாரும், கைகோரும், சபையில்
எம்மனுமக்களே;
ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே

4.    சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
மாந்தர்தாம் யாரும் கிறிஸ்துவில்;
சபை ஒன்றே ஒன்றாம்.

Post Comment

No comments:

Post a Comment