Sunday, October 20, 2013

பாமாலை 1 - ஆத்மமே உன் ஆண்டவரின்

பாமாலை 1 – ஆத்மமே உன் ஆண்டவரின்
Praise my soul, the King of heaven

’என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்’ சங்கீதம் 30 : 12

கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் கடவுளைத் துதிக்க ஏவப்படுகிறோம். பொதுவாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மைகளுக்காக அவரைத் துதிக்கிறோம்.  ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லாதிருக்கும்போது அவரைத் துதிக்கிறோமா? நம்மில் அநேகருக்கு வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் அடிக்கடி நேர்ந்ததில்லை.  ஆயினும் இதை முன்னிட்டு நாம் கடவுளைத் துதிக்கிறோமா? ஆகவே எந்நிலையிலும் நாம் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறவாதிருப்போமாக.  நமது ஆலய ஆராதனைகளில் முதல் பகுதி எப்போதும் தெய்வ ஸ்துதியாகவே இருக்கும்.  இப்பகுதியில் பாடப்படும் பாடல்கள், வாசிக்கப்படும் திருமறைப்பக்குதிகள், ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் எல்லாம் தெய்வ ஸ்துதியே.  நமது பாட்டுப்புத்தகங்களிலும் முதல் பகுதியில் தெய்வஸ்துதி பாடல்களே வைக்கப்பட்டிருக்கின்றன.  பாமாலையின் முதல் பாடலாகிய இப்பாடல், 103ம் சங்கீதத்தைத் தழுவி எழுதப்பட்ட ஒரு துதிப்பாடலாகும்.

1834ம் ஆண்டு ஹென்ரி லைட் போதகர் (Henry Francis Lyte), இங்கிலாந்தில் ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றிவந்தார்.  ப்ரிக்ஸ்ஹம் ஒரு கடற்கரைப் பட்டிணம்.  இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடிப்பவர்கள்.  இம்மக்கள் அலைமிகுந்த கடலில் அதிக தைரியத்துடனும், துணிவுடனும் தங்கள் படகுகளை ஓட்டிச்சென்று வருவர்.  போதகர் அடிக்கடி கடற்கரையில் நின்று, மீன்படகுகள் கடுமையான அலைகள் மத்தியிலும் பத்திரமாகக் கரை சேருவதைக் கவனிப்பது வழக்கம்.  எந்த ஆபத்திலும் கடவுள் ஒரு தந்தைபோல் அவர்களைப் பராமரித்து வருகிறார் என்னும் உண்மையைப் போதகர் உணர்ந்து, அவர்கள் கடவுளைத் துதித்துப் பாடுவதற்கேற்ற ஒரு பாடல் எழுத எண்ணங்கொண்டார்.  இதற்கு ஆதாரமாக அவர் 103ம் சங்கீதத்தைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு செய்யுளாக எழுதி இப்பாடலை உருவாக்கினார்.  எந்நிலையிலும் கடவுளின் கரம் நம்மைத் தாங்கிக்காப்பதால் நாம் அவரைத் துதித்தல் ஏற்றது என்பதை இப்பாடலின்மூலம் உணர்த்துகிறார்.  மேலும், சர்வ சிருஷ்டிகளும் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை இப்பாடலின் கடைசிக்கவியில் எடுத்துரைக்கிறார்.

ஹென்ரி பிரான்ஸிஸ் லைட் போதகர் 1793ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி ஸ்காட்லாண்ட் நாட்டில் எட்னம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளமையில் மிகவும் எளிமையான நிலைமைகளை அவர் அனுபவிக்கவேண்டியிருந்தது.  ஆரம்பக்கல்வியைப் பிறந்த ஊரிலேயே முடித்து, குருத்துவ ஊழியப் பயிற்சியை டப்ளின் நகரில் பெற்றார்.  அவரது கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலச் செய்யுள்கள் எழுதுவதில் மூன்றுமுறை முதல் பரிசு பெற்றார்.  பயிற்சியை முடித்தவுடன் 1815ல் அயர்லாந்தில் வெக்ஸ்ஃபோர்ட் சபையில் போதகராக அபிஷேகம் பெற்றார்.  ஐந்து ஆண்டுகளுக்குப்பின் லிமிங்டன் சபையிலும், கடைசியாக 1823 முதல் ப்ரிக்ஸ்ஹம் என்னும் மீன்பிடிக்கும் கடற்கரைப் பட்டிணத்திலும் போதகராகப் பணியாற்றினார்.

அவர் பணியாற்ற ஆரம்பித்தபோது அவரது பணி, கடமைப் பணியாக மட்டுமே இருந்தது.  மேலும் அவரது கவித்திறன், பொதுவான விஷயங்களைக்குறித்த கவிகள் எழுதுவதிலேயே செலவிடப்பட்டது.  ஆனால் அவர் இருபத்தைந்து வயதாயிருக்கையில், அவரது நண்பரான ஒரு போதகர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.  அவரது மரணப்படுக்கையினருகில் நிற்கும்போது அவர் கூறிய இறுதிவார்த்தைகளையும், தம் பாவங்களுக்கு நிவாரணமான ஒருவர் உண்டு என்னும் அவரது நம்பிக்கையையும் கவனித்த லைட் போதகரின் வாழ்க்கையில் அன்று முதல் ஒரு புதுதிருப்பம் உண்டானது.  இதன்பின்பு அவர் எழுதிய கவிகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை அளிப்பதற்காக எழுதப்பட்டது.

ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றும்போதுதான் அவர் ஏராளமான பாடல்கள் எழுதினார்.  1847ம் ஆண்டு அவர் 54 வயதாயிருக்கையில் காசநோயினால் பீடிக்கப்பட்டு, குளிர் காலத்தை உஷ்ணமான இத்தாலிநாட்டில் கழிக்கத் தீர்மானித்தார்.  பிரயாணத்திற்கு முன் அவர் அநேக ஆண்டுகளாக முடிக்காமல் வைத்திருந்த, ‘என்னோடிரும் மா நேச கர்த்தரே’ என்னும் பாடலையும் எழுதி முடித்தார்.  பின்பு இத்தாலி நாட்டுக்கு பயணமானார்.  வியாதி கடுமையாயிருந்தபடியால், 1847ம் ஆண்டு நவம்பர் மாதம், 20ம் தேதி, இத்தாலி நாட்டிலுள்ள நைஸ் நகரத்தில் அவர் காலமானார்.

‘ஆத்மமே உன் ஆண்டவரின்’ என்னும் பாடல் முன் கூறியபடி ப்ரிக்ஸ்ஹம் நகரிலுள்ள மீனவர்களுக்காக எழுதப்பட்டது.  லைட் போதகர் இறந்த நூற்றாண்டு தினமான 1947 நவம்பர் மாதம் 20ம் தேதி, எலிசபெத் மகாராணியாருக்கும், எடின்பரோ பிரபுவுக்கும் நடந்த திருமண ஆராதனையில் மகாராணியின் விருப்பப்படி இப்பாடல் பாடப்பட்டது.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

v  ’என்னோடிரும் மா நேச கர்த்தரே (பாமாலை 36)
v  சிலுவை சுமந்தோனாக (பாமாலை 311)

v  ஆண்டவா! மேலோகில் உம்’ (பாமாலை 220)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு சுகம் ஜீவன் அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலூயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப் போற்று.

2.    நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலூயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி.

3.    தந்தைபோல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலூயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

4.    என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே
அல்லேலூயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.
Praise my Soul the King of Heaven

Post Comment

No comments:

Post a Comment