Monday, October 7, 2013

பாமாலை 60 - ஓ பெத்லகேமே சிற்றூரே

பாமாலை 60 – ஓ பெத்லகேமே சிற்றூரே
O Little town of Bethlehem
Tune: Forest Green

யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்” மத் 2 : 6

நம் ஆண்டவராகிய கிறிஸ்துநாதர் பிறந்தபோது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் அவரைத் தேடி, பலஸ்தீனா நாட்டுக்கு வந்து, ஏரோது அரசனின் அரண்மனையில் விசாரித்தபோது, ஏரோது கலக்கமடைந்து, யூதத்தலைவர்களை அழைத்து, கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று கேட்டான்.  அவர்கள் தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருந்தபடி (மீகா 5:2), யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமில் பிறப்பார் என்றனர்.  பெத்லகேம் ஒரு சிற்றூர்.  ஆனால் தாவீது அரசனுடைய வம்சத்தினர் குடியிருந்த ஊர்.  ஆதலின், யூதருக்கு ராஜாவாகிய கிறிஸ்து அவ்வூரில் பிறந்தது மிகவும் பொருத்தமானது. 

Phillips Brooks
Source : Wiki
1865ம் ஆண்டு, பிலிப்ஸ் புரூக்ஸ் (Phillips Brooks) என்னும் குருவானவர் கிறிஸ்து பிறப்பு தினத்திற்கு முந்தினநாள் இரவில், பலஸ்தீனா நாட்டில் பெத்லகேம் ஊரிலுள்ள ஒரு சிற்றாலயத்தில் ஆராதனைக்குச் சென்றிருந்தார்.  இவ்வாலயம் கிறிஸ்து பிறந்த இடம் என நம்பப்படுகிற இடத்தில், கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியால் கி.பி. நான்காவது நூற்றாண்டில் கட்டப்பட்டது.  ஆராதனைக்குமுன் புரூக்ஸ் போதகர் பெத்லகேம் ஊரைச் சுற்றிப்பார்த்து ஊரின் அழகையும், வானத்தில் நட்சத்திரங்களின் தோற்றத்தையும் கண்டு பரவசமடைந்து, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கிறிஸ்து பிறந்த இரவில் அவ்வூர் எவ்விதம் இருந்திருக்கவேண்டும் என்று தனது மனக்கண்களில் கண்டார்.  இக்காட்சி அவர் ஆயுள் முழுவதும் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.  நடு நிசியில் ஆராதனைக்கு ஆலயமணியடிக்கவே, அவர் ஆலயத்தினுள் சென்று ஆராதனையில் கலந்துகொண்டார்.  இவ்வாராதனை அவரை மேலும் பரவசப்படுத்தியது.  பின்னர் அவர் தனது சொந்த நாடான அமெரிக்காவிற்குத் திரும்பினார்.

மூன்று ஆண்டுகளுக்குப்பின், புரூக்ஸ் போதகர் பிலடெல்பியா நகரத்தில் தூய திரித்துவ ஆலயத்தின் குருவாக பணியாற்றிவரும்போது, கிறிஸ்து பிறப்புதினத்திற்கு சில நாட்களுக்கு முன் அவரது சபை ஓய்வுநாட்பள்ளிச் சிறுவர் ஒரு கிறிஸ்மஸ் பாடல் எழுதித்தரும்படி போதகரைக் கேட்டனர்.  உடனே போதகருக்கு, அவர் மூன்றாண்டுகளுக்குமுன் பெத்லகேமில் கழித்த நள்ளிரவு ஞாபகத்துக்கு வந்தது.  ஆகவே அவர் பெத்லகேமைக் குறித்த ஒரு பாடல் எழுதத் தீர்மானித்து சிறிதுநேரத்தில், ‘ஓ பெத்லகேமே சிற்றூரே’ என்னும் பாடலை எழுதி முடித்தார்.  மறுநாள் அவ்வூர் ஆலயப் பாடகர் தலைவரும், ஓய்வுநாட்பாடசாலை மேற்பார்வையாளருமான லூயி ரெட்னர், போதகரின் அறைக்கு வந்தபோது, இக்கவிகளை அவரிடம் கொடுத்து அதற்கேற்ற ஓர் ராகம் அமைத்துத் தருமாறு கேட்டார்.  ரெட்னர் வெகுநேரம் முயற்சி செய்தும் நல்ல ராகம் ஒன்று ஒன்றும் அமையவில்லை.  கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தின இரவு அவர் தூங்கிக்கொண்டிருக்கையில் அவர் காதில் ஓர் ராகம் ஒலிப்பதுபோலக் கேட்கவே அவர் எழுந்து, அருகிலிருந்த ஒரு காகிதத்தில் ராகத்தைக் குறித்துவிட்டு, மறுபடியும் படுத்துத் தூங்கினார்.  மறுநாட்காலையில் எழுந்து அந்த ராகத்திற்கு இசை (Harmony) அமைத்து, அன்றையத் தினமே பாடசாலைப் பிள்ளைகளைப் பயிற்றுவித்துப் பாடச்செய்தார்.  இவ்விதமாக ஓர் அழகிய கிறிஸ்மஸ் பாடல் உருவானது.  

Vaugan Williams
(Source : Wiki)
(இப்பதிவில் இருக்கும் ராகமானது ’Forest Green' என்று அழைக்கப்படும் ராகமாகும்.  இந்த ராகத்தை  Ralph Vaughan Williams என்பவர் ‘O Little Town of Bethlehem' என்ற இப்பாமாலைக்கு உபயோகித்துள்ளார். அதுவே இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.  லூயி ரெட்னர் எழுதிய ராகத்தை கேட்க இங்கே சொடுக்கவும்).

இப்பாடலை எழுதிய பிலிப்ஸ் புரூக்ஸ் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் 1835ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 13ம் தேதி பிறந்தார்.  முதலில் அவ்வூர் ஆரம்பப்பள்ளியில் பயின்று பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார்.  சில காலம் லத்தீன் மொழி ஆசிரியராகப் பணியாற்றியபின், குருத்துவ ஊழியத்திற்காக வர்ஜினியா திருமறைக் கல்லூரியில் பயிற்சி பெற்றார்.  1859 முதல் 1869 வரையில் பிலடெல்பியா நகரில் போதகராகப் பணியாற்றியபின், பாஸ்டன் நகரில் வெகுகாலம் போதகராகத் திருப்பணியாற்றினார்.  இறுதியில் 1891ல் மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் அத்தியட்சராக இரு ஆண்டுகள் பணியாற்றினார்.

தமது நீண்டகால ஊழியத்தின்போது அவர் கிறிஸ்துவின் பிறப்பு, உயிர்த்தெழுதல் பண்டிகைக்கான பல பாடல்கள் எழுதியுள்ளார். அவர் 1893ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 23ம் தேதி தமது 58வது வயதில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஓ பெத்லகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான்வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.

2.    கூறும், ஓ விடி வெள்ளிகாள்
இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே,
பாரில் அமைதியாம்;
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்,
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்

3.    அமைதியாய் அமைதியாய்
விண் ஈவு தோன்றினார்
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
அமைதியால் ஈவார்
கேளாதே அவர் வருகை
இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
தம் சாந்த ஆன்மாவில்

4.    வேண்ட நற் சிறு பாலரும்
இத் தூய பாலனை
அழைக்க ஏழை மாந்தரும்
இக்கன்னி மைந்தனை
விஸ்வாசமும் நம் பாசமும்
வரவைப் பார்க்கவே,
இராவை நீக்கித் தோன்றுவார்
இம்மாட்சி பாலனே.

5.    பெத்லெகேம் தூய பாலனே
இறங்கி வருவீர்;
ஜனிப்பீர் எங்களில் இன்றும்
எம் பாவம் நீக்குவீர்;
நற்செய்தி இவ்விழாதன்னில்
இசைப்பார் தூதரே;
ஆ வாரும், வந்து தங்கிடும்
இம்மானுவேலரே.

O Little Town of Bethlehem (Tune: Forest Green)

Post Comment

No comments:

Post a Comment