Monday, April 27, 2020

பாமாலை 262 - என் மேய்ப்பர் (Dominus Regit Me)

பாமாலை 262 – என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்
(The King of Love my Shepherd is)

‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்’. சங்கீதம் 23: 1

கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும் திருமறையிலுள்ள சங்கீதங்களையே பாடல்களாகப் பாடிவந்தனர். இப்போதும் பல சபைகளில் சங்கீதங்கள் ராகத்துடன் பாடல்களாகவே பாடப்படுகின்றன.  அக்காலத்திலும் சில பக்தர்களால் சில பாடல்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவை வெகுவாக ஆலய ஆராதனைகளில் பாடப்படவில்லை.  பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில், பல சங்கீதங்கள் ஞானப்பாடல் ரூபத்தில் அமைக்கப்பட்டு (Metrical Psalms) அவற்றிற்கேற்ற ராகங்களுடன் பாடப்பட்டன.  இக்காலத்திலும், சங்கீதங்களை மாறி மாறி வாசிப்பதற்குப் பதிலாக, ஸ்காட்லாண்ட் சபை முதலிய பல சபைகளில் சங்கீதப் பாடல்களையே பாடிவருகின்றனர்.  பின்னர் 1542ம் ஆண்டு மார்ட்டின் லூதர் இப்பாடல்களைப் புத்தக வடிவில் வெளியிட்டார். சில ஆண்டுகளுக்குப்பின், 1562ல் ஜெனீவன் சங்கீதப்பாடல்கள் (Genevan Psalter) என்னும் பெயரால் ஒரு பாட்டுப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதிலுள்ள பாடல்களே கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளிலும் மற்றும் வழிபாடுகளிலும் பாடப்பட்டுவரும் பாடல்களின் ஆரம்பமாகும்.

தற்காலத்திலும் சங்கீதங்களையே அடிப்படையாகக் கொண்ட பல பாடல்கள் நமது பாட்டுப்புத்தகங்களிலுண்டு. இதற்கு உதாரணங்கள்:

v  பாமாலை 9 – பூலோகத்தாரே யாவரும் (சங்கீதம் 100)
v  பாமாலை 253 – கர்த்தாவே யுகயுகமாய் (சங்கீதம் 90)
v  பாமாலை 254 – களிப்புடன் கூடுவோம் (சங்கீதம் 136)
v  பாமாலை 212 – பகலோன் கதிர் போலுமே (சங்கீதம் 72)
v  பாமாலை 327 – வாழ்நாளில் யாது நேரிட்டும் (சங்கீதம் 34)
v  பாமாலை 375 – நீரோடையை மான் வாஞ்சித்து (சங்கீதம் 42)

‘என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்’ என்னும் இப்பாடல் 23ம் சங்கீதத்தைத் தழுவி எழுதப்பட்டது.

Sir Henry Williams Baker
ஆங்கிலத் திருச்சபைகளில் உபயோகப்பட்டுவரும், ‘Hymns Ancient and Modern’ என்னும் பாட்டுப்புத்தகம் தொகுக்கப்படும்போது, அதின் தொகுப்பாளராக, ஸர் ஹென்றி பேக்கர் (Sir Henry Williams Baker) நியமிக்கப்பட்டார்.  அவர் அப்புத்தகத்தில் பல சங்கீதப் பாடல்களைச் சேர்க்க விரும்பி, பல பாடல்களைச் சேகரித்தார்.  23ம் சங்கீதத்தைத் தழுவிய சில பாடல்களும் கிடைத்தன.  ஆனால் அவை ஒன்றும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை.  ஆகவே இச்சங்கீதத்தைத் தழுவிய பாடல் ஒன்றைத் தாமே எழுதத் தீர்மானித்து, ‘என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்’ என்ற பாடலை 1859ல் ஆங்கிலத்தில் எழுதினார்.  அவரால் எழுதப்பட்ட ஏராளமான பாடல்களில், இப்பாடலே மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

ஸர் வில்லியம் ஹென்றி பேக்கர் 1821ம் ஆண்டு லண்டன் மாநகரில் பிறந்தார்.  அவரது தந்தை ஆங்கிலக் கப்பற்படையில் தளபதியாக (Admiral) பணியாற்றியவர்.  ஹென்றி பேக்கர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திரித்துவக் கல்லூரியில் பயின்று, 1844ல் பி.ஏ. பட்டமும், 1847ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.  1846ல் அவர் குரு அபிஷேகமும் பெற்று, தமது திருப்பணியை ஆரம்பித்தார்.  1851ம் ஆண்டு ஹெரிபோர்ட்ஷயர் மாகாணத்தில் மங்க்லண்ட் நகரின் பிரதம குருவாக நியமனம் பெற்றார்.  இச்சபையில் அவர் இருபத்தாறு ஆண்டுகள் பணியாற்றி, தன் வாழ்க்கையின் மிகுதியான பாகத்தை பாடல்கள் எழுதுவதிலும், பாட்டுப் புத்தகங்கள் இயற்றுவதிலும் செலவிட்டார்.  கிறிஸ்தவ உலகத்திற்கு அவர் செய்த அரிய சேவை, அவர் இயற்றிய, ‘Hymns Ancient and Modern’ என்னும் பாட்டுப்புத்தகமாகும்.  இதில் அவரே எழுதிய 37 பாடல்கள் உண்டு.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

v  பாமாலை 177 – நாதன் வேதம் என்றும்
v  பாமாலை 221 – கர்த்தா நீர் வசிக்கும்
v  பாமாலை 407 – விண்வாசஸ்தலமாம் பேரின்ப வீடுண்டே

ஸர் ஹென்றி பேக்கர், 1877ம் ஆண்டு, தமது 56ம் வயதில் காலமானார்.  தமது மரணப் படுக்கையில் அவர் கடைசியாகப் பேசிய வார்த்தைகள் இப்பாடலின் மூன்றாவது கவியாகும்.  அது கீழ்க்கண்டவாறு ஆங்கிலத்தில் அழகாக அமைந்துள்ளது:

‘Perverse and foolish oft I strayed,
But yet in love He sought me,
And on His shoulder gently laid
And home, rejoicing, brought me’.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant
Descant with Unison






































1.    என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.

2.    ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.

3.    நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.

4.    சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.

5.    இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.

6.    என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.

7.    என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.

Post Comment

No comments:

Post a Comment